திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். உலகப் புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருவது வழக்கம்.
வைகுண்ட ஏகாதசி:
குறிப்பாக, மார்கழி மாதமானது பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த நன்னாளில் பெருமாளை வணங்குவதற்கு திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்னும் 4 நாட்களில் கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில், அடுத்து மார்கழி நடக்க உள்ளது.
டிக்கெட்டுகள் எப்போது?
வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் எப்போது விற்பனையாகும்? என்ற எதிர்பார்ப்புடன் பக்தர்கள் உள்ளனர். இதுதொடர்பான, முக்கிய அறிவிப்பை திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். வைகுண்ட ஏகாதசிக்கான தரிசன டிக்கெட்டுகளின் இணையதள விற்பனை தேதி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும். வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கான 10 நாட்களும் சர்வ தரிசனம் உண்டா? எஸ்எஸ்டி டோக்கன் வழங்கப்படுமா? என்பதை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
வைகுண்ட ஏகாதசி வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. வரும் டிசம்பர் 30ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 8ம் தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இந்த 10 நாட்களும் பக்தர்கள் இந்த வைகுண்ட துவாரம் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க இயலும்.
ரூபாய் 300:
வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் விலை ரூபாய் 300 ஆகும். ஜனவரி மாதத்திற்கான இணையதள டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான டிக்கெட்டுகளுடன் சேர்த்து வைகுண்ட ஏகாதசி உற்சவ டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்கழி மாதம் அரையாண்டு தேர்வு விடுமுறையால் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்பதால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு இருக்கும் என்றே கருதப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக ஏராளமான வசதிகளையும் திருப்பதி கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் கோயில் உள்பட வைணவ தலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.