உலகின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்து காணப்படுவார்கள்.


விஐபி பிரேக் தரிசனம்:


திருப்பதியில் பொது தரிசனம் உள்பட சாமி தரிசனத்திற்கு பல்வேறு வகைகள் உள்ளது. அதில் விஐபி பிரேக் தரிசனம் மிக மிக முக்கியமானது ஆகும். இந்த நிலையில், விஐபி பிரேக் தரிசனத்தில் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படுகிறது.


திருப்பதியில் கடந்த 2008ம் ஆண்டு அனந்த ஸ்வர்ணமயம் என்ற திட்டம் அமலில் இருந்தது. கடந்த 2008ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தால் அறிமுகம் செய்யப்பட்ட இந்த திட்டம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. தற்போது இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


இந்த திட்டத்தின்படி, திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு பொது விஐபி ப்ரேக் தரிசனம் மூலம் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.


தங்கக்காசு:


இதன்படி, திருப்பதி கோயிலுக்கு நன்கொடை வழங்குபவர்கள் 3 நாட்கள் வரை அறைகளில் தங்க அனுமதி வழங்கப்படும். அவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 500 கட்டணமாக நிர்ணயிக்கப்படும். மேலும், ஆண்டுக்கு மூன்று நாட்கள், நன்கொடையாளரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் அதிகபட்சமாக 5 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


இவர்களுக்கு ஒரு முறை 20 சிறிய லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படும். நன்கொடையாளர்கள் முதன்முறையாக தரிசனத்திற்கு வரும்போது 5 கிராம் தங்க டாலர்கள், 50 கிராம் வெள்ளி டாலர் பரிசாக வழங்கப்படும். இவர்கள் தரிசனம் செய்த பிறகு வருடத்திற்கு ஒரு முறை உத்தரியம், ரவிக்கை துணி வழங்கப்படும்.


25 வருடங்கள் செல்லும் பாஸ்புக்:


வருடத்திற்கு ஒரு முறை 10 மகா பிரசாதம் பாக்கெட்டுகள் இவர்களுக்கு வழங்கப்படும். நன்கொடையாளர்கள் நன்கொடை வழங்கிய நாளில் இருந்து 25 வருடங்களுக்குச் செல்லுபடியாகும் நன்கொடை பாஸ்புக் ஒன்று வழங்கப்படும். இந்த புத்தகத்தில் அவர்கள் வழங்கப்படும் நன்கொடைகள் ஒவ்வொரு முறையும் வரவு வைக்கப்படும்.


திருப்பதிக்கு உண்டியலில் மட்டும் தினசரி லட்சக்கணக்கான ரூபாய் காணிக்கையாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர கோடிக்கணக்கான ரூபாயில் பக்தர்கள் சிலர் திருப்பதி ஏழுமலையானுக்கு நன்கொடையாக வழங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.