மயிலாடுதுறை மாவட்டம் சேந்தங்குடி அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதிbதொடங்கி வைத்து உடல்நலம் சார்ந்த அறிவுரைகளை வழங்கினார்.
கோயில் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்
மயிலாடுதுறை வட்டம் சேந்தங்குடி பகுதியில் அருள்மிகு துர்கா பரமேஸ்வரி திருக்கோயில் மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்து, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது;
ஆட்சியர் பேச்சு..
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, இன்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பணியாளர்கள் பணியுடன் உடல் நலத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும். தமிழ்நாடு அரசானது மக்களைத் தேடி மருத்துவம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த திட்டம் கோயில்களில் பணியாற்றக்கூடிய பணியாளர்கள் உங்கள் உடல் நலனை பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நோயையும் ஆரம்ப காலத்திலேயே கண்காணித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தீவிரமானால் கட்டுப்படுத்துவது கடினம். ஆகையால், தமிழ்நாடு அரசு மருத்துவ முகாம்களை அந்தந்த துறைகளில் சிறப்பாக செயல்படுத்தி கொண்டு வருகிறது. இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
கடவுளை பூஜிப்பது போல் உங்களையும் பூஜிக்கவும்
அர்ச்சகர்கள் ஆலயத்தில் உள்ள சுவாமியை அதிகம் நேசிக்கிறீர்கள். ஆனால், தங்கள் உடல் நலனில் கவனம் செலுத்த தவறிவிடுகிறீர்கள். கடவுளை பூஜிப்பது போல் உங்களை நீங்களே பூஜிக்க வேண்டும். நம்மை அம்பாள் பார்த்துக்கொள்வார், மூலவரான கடவுள் பார்த்துக் கொள்வார் என நினைக்க கூடாது. இது போன்ற மருத்துவ முகாம்கள் அனைத்து சக்திகளும் சேர்ந்து நமக்கு அமைத்துக் கொடுத்ததாக நாம் என்ன வேண்டும்.
சர்க்கரையை குறைத்துக்கொள்ள வேண்டும்
நாம் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், நிறைய பொருள்களில் சர்க்கரை அதிக அளவில் நாம் எடுத்துக் கொள்ளும் நிலை இருக்கின்றது. நம்மை அறியாமலேயே நம் உடலில் சேரும் நிலை உள்ளது. ஆகவே, நாம் அதில் கவனம் செலுத்த வேண்டும். உணவின் அளவை நாம் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடந்து கொள்ள வேண்டும். மருத்துவ முகாமை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இம்மருத்துவ பரிசோதனை முகாமில் கண் பரிசோதனை, இரத்த அழுத்தம், மருத்துவ ஆலோசனை போன்ற அனைத்தும் உள்ளது. இசை, யோகா போன்றவற்றை தொடர்ந்து செய்து, நம் உடல் நலத்தை காத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், உதவி ஆணையர் ரவிசந்திரன், மயிலாடுதுறை நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கலந்து கொண்டனர்.