திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் இன்று மாலை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க இருந்த நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் திருமலை திருப்பதி கோயிலில் பெருமாளுக்கு பல உற்சவங்கள் நடைபெரும். அதில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுவது வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவம் தான். குறிப்பாக, புரட்டாசி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் வெங்கடாஜலபதி பிறந்தநாள் அனுசரிக்கப்படுவதால் அந்த மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற திருப்பதி பிரம்மோற்சவம்:
திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையான் பிரம்மதேவரிடம் தனக்கு உற்சவம் நடத்த சொல்லிக் கேட்டதாகவும், அதன்படி பிரம்மதேவர் நடத்தும் உற்சவம்தான் பிரம்மோற்சவம் என நம்பப்படுகிறது. வழக்கமாக பிரம்மோற்சவத்தின் போது தினசரியும் காலையும் மாலையும் மலையப்பசுவாமி நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்து அருள்பாலிப்பார்.
பிரம்மோற்சவ வீதி உலாவின் போது வாகனங்களுக்கு சற்று முன்பாக பிரம்ம ரதம் என்று சிறிய தேர் இழுத்துச் செல்லப்படும். பிரம்மர் இந்த தேரில் அமர்ந்து, பெருமாள் வீதியுலா வரும் மாடவீதிகளை சோதித்துப் பார்ப்பதாக ஐதீகம்.
அதன் பிறகே பெருமாள் இருக்கும் வாகனம் வீதியுலா செல்லும். இந்த வழக்கம் திருப்பதியில் மட்டுமே உள்ளது. மற்ற கோயில்களில் சீவேலி என்ற சிரிய பல்லக்கில் சக்கரத்தாழ்வார் விற்றிருப்பார் அந்த வாகனம் தான் பெருமாள் அவதார வாகனத்திற்கு முன் செல்லும்.
அதிர்ச்சி அடைந்த பக்தர்கள்:
திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து நடத்தப்படும் முதல் பிரம்மோற்சவம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு கிளப்பி இருந்தது. கொடி ஏற்றுவதற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளது.
கொடியேற்றத்திற்கான கயிறை மரத்தின் உச்சியில் பொறுத்த முயற்சித்தபோது வளையம் உடைந்துள்ளது. தங்கக் கொடி மரத்தில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பதி லட்டை செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம் நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், தங்கக் கொடி மரம் உடைந்திருப்பது பக்தர்களை மேலும் கவலை கொள்ள செய்துள்ளது.
புரட்டாசி மாதம் வழக்கமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், அதிலும் புரட்டாசி சனிக்கிழமையின் போது லட்சக்கணக்கான மக்கள் பெருமாளை தரிசனம் செய்ய வருவார்கள். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக தான் இருக்கும்.
கடந்த இரண்டு சனிக்கிழமையின் போது பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில் இருந்தது. இதனால் அடுத்து வரும் 3 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.