திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிமாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.




அறுபடை வீடுகளுள் இரண்டாம்படை வீடான அருள்மிகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலானது சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் கடற்கரை அருகில் அமைந்திருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவிழா காலங்களை தவிர்த்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.




இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோதிடர் ஒருவர் பௌர்ணமி தினத்தில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி விளக்கேற்றி வழிபாடு நடத்தினால், நினைத்த காரியம் கைகூடும் என யூடியூப் மூலம் தெரிவித்து இருந்தார். இதனால் பௌர்ணமி தினங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி, விளக்கேற்றி பௌர்ணமி நிலவை வழிபட்டு அதிகாலையில் கடலில் புனித நீராடி நாழிக்கிணறு தீர்த்தத்தில் நீராடி தரிசனம் செய்வது வழக்கமாகக் கொண்டு வருகின்றனர்.




இந்த நிலையில் ஆடி மாதம் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான  பக்தர்கள்  நேற்று இரவு முதலே கோயில் கடற்கரையில் குவிந்தனர். அதிகாலை முதலே கடலில் புனித நீராடி சுமார் 8 மணி நேரம் நீண்ட வரிசையில் வெயிலில் குழந்தைகளுடன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலை கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தரிசனத்திற்கு பகுதி பகுதியாக அனுப்பி வருகின்றனர்.




மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இலட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருச்செந்தூர் நகரம் ஸ்தம்பித்தது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மார்க்கமாக வரக்கூடிய வாகனங்களுக்கு தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. வரலாறு காணாத அளவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம் திருவிழா காலம் போல் காட்சியளித்தது.