காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி வரதராஜ பெருமாள் காட்சியளித்து வருகிறார்.


காட்சியளித்த வரதராஜ பெருமாள்


மூன்றாம் நாள் காலை உற்சவமான இன்று பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருடசேவை உற்சவம் இன்று அதிகாலை 4 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டது. வரதராஜ பெருமாள்  நீல நிற பட்டுடுத்தி திருவாபரங்கள் அணிந்து தங்க கருட வாகனத்தில் கோவில் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


கோவிலில் இருந்து  இருந்து புறப்பட்டு செட்டி தெரு, ரங்கசாமி குளம், கீரை மண்டபம், பிள்ளையார்பாளையம், நான்கு ராஜ வீதி, பேருந்து நிலையம், மூங்கில் மண்டபம், போன்ற மாநகரின் முக்கிய வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.



 


கருட சேவை உற்சவத்தை ஒட்டி காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் மாவட்ட காவல் துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 5 தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சியளித்த வரதராஜ பெருமாள்


 


அடுத்த உற்சவங்கள் என்னென்ன ?


மே மாதம் 23ஆம் தேதி ( 23- 05-2024  ) :  நாக  வாகனத்தில் ஸ்ரீ பரமநாதர் திருக்கோளத்தில் ,  காலை பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தொடர்ந்து  மாலை  சந்திர பிரபை வாகனத்தில்  திருவீதி உலா   தரிசனம் தருகிறார். தொடர்ந்து  நெல்  அளவை  நிகழ்ச்சியும் அன்றைய தினம் நடைபெறுகிறது.


மே மாதம் 24 ஆம் தேதி (  24- 05-2024 ) :  தங்க பல்லாக்கு  உற்சவம்   ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம்  நடைபெறுகிறது.  தொடர்ந்து மாலை வேலையில் யாளி  வாகனத்தில்   திருவீதி உலா நடைபெறுகிறது.


மே மாதம் 25ஆம் தேதி ( 25- 05-2024 ) :  ஸ்ரீ வேணுகோபாலர் திருக்கோளத்தில் தங்கச்  சப்பரத்தில் காட்சியளிக்கிறார்.  இதனை தொடர்ந்து  சொர்ண அபிஷேகமும் நடைபெறுகிறது.  மாலை  வேலையில்  யானை வாகனத்தில், வீதி உலா மற்றும் இரவு ஸ்ரீ ஏகாம்பரநாதர்  திருக்கோவில் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும்,  நடைபெறுகிறது.




மே மாதம் 26ஆம் தேதி ( 26- 05-2024 ) :  விழாவின் பிரதான திருவிழா  திருத்தேர் உற்சவம்  நடைபெறுகிறது. காலை 2 மணி அளவில்  உற்சவர் புறப்பாடும், தொடர்ந்து திருத்தியரை சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், இதனை அடுத்து தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக  திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.  அன்றைய தினம் மாலை  உற்சவம் கிடையாது.


மே மாதம் 27ஆம் தேதி ( 27- 05-2024 ) :  பகல் 2:30 மணி அளவில்  தொட்டி திருமஞ்சனம்  மற்றும் மாலை 6 மணி அளவில் குதிரை வாகன உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு  ஸ்ரீ ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் ஏசல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.


மே மாதம் 28ஆம் தேதி ( 28- 05-2024 ) : ஆள்மேல் பல்லாக்கு ( மட்டை அடி உற்சவம் ) தொடர்ந்து, காலை 10 மணி அளவில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.