சிவபெருமானுக்கு பல ஊர்களில் பல பெயர்களில் பல திருத்தலங்கள் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் அமைந்த பஞ்ச பூத தலங்களில் நெருப்புக்கு அதாவது அக்னி தலமாக திகழ்வது திருவண்ணாமலை ஆகும். அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கினால் துன்பங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.


இன்று இரவு பெளர்ணமி:


அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் அண்ணாமலையார் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வணங்கி செல்வதும், வணங்கி செல்லும் பக்தர்கள் ஈசனை நினைத்து கிரிவலம் செல்வதும் வழக்கம் ஆகும்.


ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமி இன்று இரவு வருகிறது. பெளர்ணமி என்பதால் திருவண்ணாமலையில் நாளை பக்தர்கள் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு என்பது நம்பிக்கை ஆகும். வழக்கமாக பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம்.




கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம்:


முழு நிலவு பிரகாசமாக ஒளிக்கும் பௌர்ணமி தினமான நாளை ஓம் நமச்சிவாய எனும் நாமத்தை சொல்லிக்கொண்டே கிரிவலம் வர வேண்டும். கிரிவலம் வருவதற்கு இன்று இரவு 02.58am மணி முதல் மறுநாள் (அதாவது 20-ந் தேதி) இரவு 1.02 மணி வரை உகந்த நேரம் ஆகும். இதனால், பக்தர்கள் இன்று இரவு பெளர்ணமியில் கிரிவலம் செல்வது உகந்தது என்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பெளர்ணமி என்பதாலும், பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்பதாலும் திருவண்ணாமலையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கிரிவலம் செல்ல பக்தர்கள் ஆயிரக்கணக்கில் குவிவார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.



பௌர்ணமி சிறப்பு பேருந்துகள்;‌


விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்'வரும் 19-ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு ஆக.18 முதல் 20-ம் தேதி வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து ஆக.18-ல் 130 பேருந்துகளும், 19-ல் 250 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து ஆக.18-ல் 30 பேருந்துகளும், 19-ல் மாதாவரத்திலிருந்து 40 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும். குறிப்பாக கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இருக்கை, படுக்கை வசதி கொண்ட ஏசி 50 பேருந்துகள், 19-ம் தேதி இயக்கப்படும். மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு ஆக.19-ம் தேதி 265 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.


அதன்படி, சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்துக்கு www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' என அதில் கூறப்பட்டுள்ளது.