உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள்.
ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று மனமுருகி தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது உலகில் மீண்டும் பெருந்தொற்று பரவி வரும் நிலையில் உலக மக்கள் அனைவரும் தொற்றினால் பாதிக்காமல் இருக்கவும் பாதித்தவர்கள் தொட்டில் இருந்து மீண்டிட வேண்டிய போர் இல்லாத உலகம் அமைய வேண்டியும் மும்மாரி மழை பொழிந்து விவசாயம் செழித்து அனைத்து மக்களும் இன்புற்று வாழ வேண்டும் எனவும் அப்போது பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். நாகூர் தர்ஹா புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள 2 கோடி ரூபாய் நிதி மற்றும் கந்தூரி பண்டிகையை முன்னிட்டு சந்தன கட்டைகள் வழங்கி தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் தமிழக அரசுக்கு நாகூர் தர்ஹா நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். இதேபோல நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், தோப்புத்துறை உள்ளிட்ட50 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும், ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்