கோவை மாவட்டம் காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு பக்தர்களின் கோஷத்துடன் நடைபெற்றது.


கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி மற்றும் மாசிமக திருத்தேர் திருவிழாக்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக   இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நடப்பாண்டின் வைகுண்ட ஏகாதசி திருவிழாவானது கடந்த டிச.23 ஆம் தேதியன்று காலை திருமொழி திருநாள் தொடக்கம் எனும் பகல்பத்து உற்சவம் ஆரம்பமானது.


தொடர்ந்து திருவாய் மொழித் திருநாள் தொடக்கம் எனப்படும் இராப்பத்து உற்சவமும் துவங்க உள்ளது. இத்திருவிழாவானது வரும் ஜனவரி 11 ஆம் தேதி இரவு வரை நடைபெற உள்ளது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு முன்னர் அதாவது நேற்றிரவு எம்பெருமான் ஸ்ரீ நாச்சியார் திருக்கோலம் அதாவது (பெண் வேடம் தரித்து) மோகனாவதாரம் பூண்டு பக்தர்களுக்கு அருள் பாவித்தார். அதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் எம்பெருமான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் எழுந்தருளி சொர்க்க வாசல் வழியாக வெளியேறி திருக்கோவிலின் நான்கு ரத வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளசுமார் 30 சமூக பந்தல்களில் நின்று மக்களின் சிறப்பு பூஜைக்கு பின்னர் மீண்டும் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


பின்னர் இன்றிரவு இராப்பத்து உற்சவமானது துவங்கி அதனை தொடர்ந்து 8 நாட்களும் ராஜ அலங்காரம், வாமன அவதாரம், நரசிம்மர் அவதாரம், ராமாவதாரம், பலராமர் அவதாரம், வெண்ணெய் தாழி கிருஷ்ணன், தவழ் கிருஷ்ணன், குதிரை வாகன உற்சவம் உள்ளிட்ட 8 அவதாரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு எம்பெருமான் காட்சியளிக்க உள்ளார்.


வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியானது இன்று அதிகாலை சரியாக 5.40 மணியளவில் நடைபெற்றது. அப்போது, பக்தர்களின் சங்கு, சேகண்டி முழங்க  " கோவிந்தா வர்றார்...கோவிந்தா..கோவிந்தா..." கோஷம் முழங்க பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்நிகழ்ச்சியில் அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர். முன்னதாக நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் கோவிலை வலம் வந்து பின்னர் சொர்க்க வாசல் வழியாக வந்த எம்பெருமானுக்கு காட்சியளித்த பின்னரே திருவீதி உலா வந்தார். பக்தர்களின் பாதுகாப்பிற்காக காரமடை காவல் ஆய்வாளர் குமார் தலைமையில் 100 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காரமடை நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபட்டிருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண