தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பெயரையில் அமைந்துள்ளது அருள்மிகு அழகிய பொன்னம்மை தாயார் உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்.
சோழ தேசத்தில் திருச்சி அருகில் திருப்பேரை என்ற தலம் உள்ளது. அதே போல் தெற்கே பாண்டியநாட்டில் இருந்த இந்தத் தலமான திருப்பேரை "தென்திருப்பேரை" என்று அழைக்கப்பட்டது. இங்கு நவதிருப்பதி ஸ்தலங்களில் மகரநெடுங்குழைக்காதர் திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோவிலில் உறையும் தாயார் திருப்பேரை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெயரால் தென்திருப்பேரை என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
சிவதரிசனம் பெற விரும்பிய அகத்தியரின் சீடர் உரோமசர், அவரது ஆலோசனைப்படி தாமிரபரணி தீர்த்தத்தில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார். அதில், ஏழாவது மலர் கரையொதுங்கிய தலம் இது. இங்கு கைலாசநாதர் லிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள், சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி, பாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். கைலாசநாதருக்கு வலப்புறத்தில் அம்பிகை அழகியபொன்னம்மை சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கிறாள்.
இத்தலம் நவகைலாயங்களில் ஏழாவது தலம். இது புதன் தலமாகும். அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. இக்கோயிலில் கால பைரவர், ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்து இறைவன், வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால், இவருடன் நாய் வாகனம் இல்லை.குதிரை, நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம். ஆனால், இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன், சந்திரன், குருபகவான், சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் வித்தியாசமான அமைப்பை தரிசிக்கலாம். குருவும், சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர்.
அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர், ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி அந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தரமுடியாது என சொல்லிவிட, கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம், இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சு போடு என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்டமுடியாமல் ஒரு இளநீரை பறித்துப்போட்டார். அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்துவிட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்த தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்துவிட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.