மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.




திருவிளக்கு பூஜை:


தேவாரப்பாடல் பெற்றதும்  அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 588 திருவிளக்குகள் வைத்து தோஷங்கள் நீங்கிடவும், மாங்கல்ய பாக்கியம், குழந்தைபேறு, லட்சுமி கடாட்சத்துடன் குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி திருவிளக்கிற்கு மங்சள், குங்குமம், பூக்கள் உள்ளிட்ட மங்கள பொருட்களால் புஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.



தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி கோயில் உள்ள அருள்மிகு கௌமாரி துர்க்காபரமேஸ்வரிக்கு 34ம் ஆண்டு திருவிளக்கு பூஜை. 


மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தேவாரப்பாடல் பெற்ற மங்கள சௌந்தரநாயகி சமேத மார்க்கசகாய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சுவாமி சதாசிவ மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இறைவனை சௌந்தர நாயகி அம்பாள் திருக்கல்யாணம் புரிந்த தலமாகவும், துர்காபரமேஸ்வரி மகிஷாசூரனை வதம் செய்த பின்னர் இங்கு எழுந்தருளியுள்ள சுவாமியை வழிபட்டு அகோர வடிவிலிருந்து சௌந்தர்ய வடிவு பெற்ற தலமாகவும் விளங்குகிறது.




இத்தகைய பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலில் உள்ள கௌமாரி துர்க்காபரமேஸ்வரிக்கு 34-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் உலக நன்மை வேண்டியும், குடும்பம் சுபிட்சமடைய வேண்டியும், நடப்பாண்டு பருவமழை  வேண்டியும் 128 திருவிளக்குகள் வைத்து பெண்கள் பூஜை செய்தனர். திருவிளக்கிற்கு, குங்குமம் மற்றும் மலர்களைக் கொண்டு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். முன்னதாக அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


மகாராஜபுரம்அருள்மிகு நாகாத்தம்மன் கோயில் இரண்டாம் ஆண்டு பால் குடத் திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சி மகாராஜபுரம் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ நாகாத்தம்மன் கோயில். இங்கு ஆடி மாதத்தை ஒட்டி   பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஜோதிடர் ஆலய அறங்காவலரும் தேமுதிக பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே.எஸ். கிருஷ்ணன் தலைமையில் பெண்கள் உட்பட ஏராளமானோர் விரதம் இருந்து செம்பனார்கோவில் தாதா விநாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.




தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு நாகாத்தமனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் மகா தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பால்குட ஊர்வலத்தில் வானவேடிக்கை, மேளதாளங்கள் முழங்க பச்ச காளி, பவளக்காளி, கருப்பண்ணசாமி ஆட்டத்துடன் பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது.