திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட குமர கோவில் தெருவில் அமைந்துள்ள சியாமளா தேவி மகாகாளியம்மன் ஆலயம் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பிரதான சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் குடமுழுக்கு விழா கடந்த ஒன்பதாம் தேதி விக்னேஸ்வர பூஜை கணபதி லட்சுமி நவக்கிர ஹோமம் வாஸ்து சாந்தி பிரவேச பலி ஆகியவற்றுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முதல் கால யாக பூஜை ஆரம்பித்து பூர்ணாஹதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நேற்றுடன் நிறைவு பெற்று பூர்ணாஸ்தி தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனையடுத்து இன்று காலை நான்காம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. நான்காம் கால யாக பூஜையின் இறுதியில் மகாபூர்ணாஹதி தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து புனித நீர் கடங்கள் ஆலயத்தை சுற்றி எடுத்துவரப்பட்டு சியாமளாதேவி மகாகாளியம்மன் ஆலய விமானத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் மடப்புரம் குமர கோவில் தெரு, காட்டுக்கார தெரு தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த குடமுழுக்கிற்கு வந்திருந்த பொதுமக்கள் யாகசாலை பூஜை நடைபெறும் போது சாலையின் இருமருங்கிலும் வரிசையாக நின்று கொண்டிருந்தனர். கடங்கள் புறப்பாடு நடைபெற்ற உடன் குடமுழுக்கை காணும் ஆர்வத்தில் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையினை முழுவதுமாக ஆக்கிரமித்து நின்றனர். இதன் காரணமாக மயிலாடுதுறை நன்னிலம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் காத்திருக்கக்கூடிய நிலை ஏற்பட்டது. புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட பின்பு தீபாரதனை காட்டும் வரை அரசுப் பேருந்துகள் காத்திருந்து மக்கள் கூட்டம் கலைந்த பின்பு சென்றது. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக 15 நிமிடங்கள் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டது.
அதேபோன்று திருவாரூர் மாவட்டம் பெரும்புகளூர் பெரியாச்சி அம்மன் சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தின் குடமுழுக்கு திருவிழா கடந்த ஒன்பதாம் தேதி விநாயகர் பிரார்த்தனை வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மங்கல இசையுடன் பூர்வாங்க வழிபாடு ஆரம்பித்து மகா கணபதி ஹோமம் மஹா லெட்சுமி ஹோமம் கோ பூஜை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அன்று மாலை மங்கல இசை பிரவேச பலி நடைபெற்றது. அதனையடுத்து நேற்று முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று பூர்ணாஹதி தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் ஆரம்பித்து விநாயகர் வழிபாடு போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று பெரியாச்சி அம்மன் ஆலய கோபுரத்திற்கு குடமுளுக்கு நடைபெற்றது.அதனை தொடர்ந்து விநாயகர் குடமுளுக்கு மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து பெரியசாமி மற்றும் பரிவார தெய்வங்கள் மூலவர் மகா கும்பாபிஷேகத்துடன் மகா அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.