சிவபெருமானின் முதன்மை தலமாக பக்தர்களால் போற்றி வணங்கப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அமாவாசை, பெளர்ணமி போன்ற விசேஷ நாட்களிலும், சாதாரண நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். 

Continues below advertisement

கிரிவலம் உருவான வரலாறு:

திருவண்ணாமலையில் பக்தர்கள் ஏன் கிரிவலம் செல்கின்றனர்? இந்த கிரிவலம் எப்படி உருவானது? என்பதை கீழே விரிவாக காணலாம். 

கயிலையில் ஒரு முறை சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது, அன்னை பராசக்தி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினார். இதனால், பிரபஞ்சமே இருளில் மூழ்கியது. இதனால், பிரபஞ்சத்தில் வசித்த அனைத்த ஜீவராசிகளும் துன்பத்திற்கு ஆளாகியது. 

Continues below advertisement

இந்த பாவத்தை போக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் உள்ள கம்பை நதிக்கரையில் பார்வதி தேவி தவம் புரிந்தார். இதற்காக, சிவலிங்கத்தை வடிவமைத்து தனது தவத்தை தொடர்ந்தார். அப்போது, கம்பை நதியில் வெள்ளம் உண்டானது. இந்த வெள்ளத்தில் சிவலிங்கம் கரையாமல் இருப்பதற்காக சிவலிங்கத்தை தனது மார்போடு அணைத்தார் பார்வதி தேவி. அப்போது, தேவியின் பாவத்தை போக்கினார் சிவபெருமான். 

இடப்புறம் சுற்றி வந்த பார்வதி தேவி:

மேலும், தாங்கள் எப்போதும் எனை பிரியாமல் இருக்க தங்களது திருமேனியில் இடது புறம் எனக்கு தர வேண்டும் என்று வேண்டினார். அதற்கு திருவண்ணாமலை சென்று தவம் புரியுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். ஈசனின் கட்டளைக்கு இணங்க பார்வதி தேவி திருவண்ணாமலைக்குச் சென்று தவம் புரிந்துள்ளார். 

பார்வதி தேவி தவம் செய்யும்போது, பெளர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி உண்டாகும். அந்த  நன்னாளில் மலையை இடதுபுறம் சுற்றிவா என்ற அசரிரீ ஒலி கேட்டுள்ளது. 

அர்த்த நாரீஸ்வரர்:

அந்த அசரீரிக்கு இணங்க பார்வதி தேவி திருவண்ணாமலையை இடது புறமாக உலா வந்து கிரிவலம் வந்தார். மலையை இடது புறமாக கிரிவலத்தை நிறைவு செய்த பார்வதி தேவிக்கு சிவபெருமான் தனது இடது பாகத்தை அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருகிறார். இவ்வாறே கிரிவலம் உருவானதாக புராணங்கள் கூறுகிறது. இதன்காரணமாக கிரிவலத்தை பக்தர்கள் திருவண்ணாமலை மலையை இடது புறத்தில் இருந்து வலதுபுறமாக சுற்றி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் உலா வருவதால் தங்களது பாவங்கள் நீங்குவதுடன், ஏராளமான நன்மைகளை அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, சித்ரா பெளர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற நன்னாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் சாமி தரிசனத்திற்காக குவிகின்றனர்.