திருப்பாவையின் முதல் பாடல் மூலம், மார்கழி மாதத்தின் சிறப்பு குறித்தும், கண்ணனை தொழுது நோன்பு இருந்தால் ஏற்படும் நன்மை குறித்தும் சூடி கொடுத்த சுடர் கொடியான ஆண்டாள் எடுத்துரைத்தார். இன்று மார்கழி மாதத்தின் இரண்டாவது நாளில், ஆண்டாள் சொல்லியிருக்க கூடியவை என்னவென்று பார்க்கலாம்.
நோன்பு ( விரதம் ) என்றாலே அதற்கென வழிமுறைகள் இருக்கும். அதுபோலவே மார்கழி மாத விரதத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து 2வது பாடல் மூலம் ஆண்டாள் எடுத்துரைக்கிறார்.
இரண்டாவது பாடல் தெரிவிப்பது:
”இந்த உலகில் வாழ்பவர்களே, மார்கழி மாதத்தில் நாம் செய்ய கூடிய முக்கியமான காரியம் என்னவென்றால், கண்ணனை வேண்டி நோன்பு இருக்க வேண்டும், மேலும், நோன்புக்கு தேவையானவற்றை நான் சொல்கிறேன்” என ஆண்டாள் கூறுகிறார்.
இரண்டாவது பாடல் மூலம், தோழிகளே, நேரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். அதாவது, விரத நாட்களில் அதிகாலையிலே நீராட வேண்டும். கண்களுக்கு மை இட்டு கொள்ளுதல் கூடாது, தலையில் மலர் சூடி கொள்ளுதல் கூடாது.
ஏனென்றால், புற தோற்ற அழகு ஒரு நாள் போக கூடியது. ஆனால் அக தோற்ற அழகு அழிவில்லாதது. ஆகையால், அகத் தோற்ற அழகே நமக்கு முதன்மையானது. ஆகையால், அதற்கு நாம் முதன்மையான முக்கியத்துவம் கொடுப்போம் என குறிப்பால் உணர்த்துகிறார்.
அடுத்ததாக, விரத நாட்களில் நெய் உண்ண வேண்டாம், பால் உண்ண வேண்டாம் என்று உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எதையெல்லாம் செய்ய கூடாதோ, அதை செய்ய கூடாது, தீயை வார்த்தைகளை பேச கூடாது, மற்றவர்கள் குறித்து தவறுதலாக பேச கூடாது என எடுத்துரைக்கிறார்.
மேலும், இல்லாதவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும் எனவும், அது நேரடியாக இறைவனுக்கே செய்ததாக கருதப்படும் எனவும் உணர்த்துகிறார்.
இதன் மூலம், மன கட்டுப்பாடும் உணவு கட்டுப்பாடும், அதனுடன் தர்மமும் சேரும் போது, விரதம் முழுமை அடையும் என இரண்டாவது பாடலில், அதாவது மார்கழி இரண்டாவது நாளில் விரத வழிமுறைகளை கூறுவதன் வழியாக மறைமுகமாக வாழ்க்கைக்கு தேவையான வெற்றிக்கு கடைபிடிக்க தேவையான நெறிகளை ஆண்டாள் எடுத்துரைக்கிறார்.
Also Read: Thiruppavai Paadal 1:"கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
பாடல் :
வையத்து வாழ்வீர்காள்! நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ? பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம், மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி,
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் கண்ணனை போற்றி 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை இயற்றியுள்ளார்.