திருப்பாவை பதினைந்தாவது பாடல் மூலம், கிண்டலாக உரையாடல் வழியாக தோழியை எழுப்புவது போல பாடல் அமைத்த ஆண்டாள், பதினாறாவது பாடல் மூலம் தோழிகள் எல்லாம் எழுந்துவிட்டனர். அனைத்து தோழிமார்களும் சேர்ந்து, கண்ணபிரானுடைய காவலரை எழுப்புவது போல் பாடல் அமைத்திருக்கிறார்.
பாடல் விளக்கம்
நந்தகோபனுடைய ( கண்ணன் தந்தை ) வீட்டில் காவல் காப்பவரே, கதவைத் திறவுங்கள், ஆயர் குல சிறுமீர்களாகிய எங்களுக்கு, கிருஷ்ணன் வாக்கு கொடுத்து உள்ளார். அது என்னவென்றால். பறை என்று சொல்லக்கூடிய ஒலி எழுப்பும் கருவியை தருவதாக வாக்கு கொடுத்து உள்ளார்.
அந்த பறை கொண்டு, நாங்கள் நோன்பு நோக்க செல்ல வேண்டும். நாங்கள் அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு, இறை வழிபாட்டுக்கு ஏற்றவாறு வந்துள்ளோம்.
எனவே, கதவை திறக்க மாட்டேன் என எதிர்மறையாக பேசி விடாதீர்கள். நேர்மறையான வார்த்தைகளை சொல்லி கதவை திறந்து விடுங்கள் என காவலரை தோழிமார்கள் எழுப்புகின்றனர்.
இப்பாடல் மூலம் ,நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்றும்; காவல் புரிவோருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் எனவும், அனைவரும் சமம் என்பதையும் ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார்.
திருப்பாவை பதினாறாவது பாடல்:
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில்காப் பானே! மணிக்கதவம் தாள் திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்ன முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.