மார்கழி மாதத்தில் கண்ணபிரானை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார். இருபத்து ஐந்தாவது பாடல் மூலம், கண்ணனின் குண நலன்களையும் வீரத்தையும் புகழ்ந்து போற்றி, அருளை பெறும் படியாக ஆண்டாள் பாடல் அமைத்துள்ளார்.


திருப்பாவை இருபத்து ஐந்தாவது பாடல் விளக்கம்:


தேவகியின் மகனாக பிறந்து, அன்றைய இரவு பொழுதே யசோதையின் மகனாக வளரச் சென்ற கண்ணனே….


உன்னையே நீ மறைத்து கொண்டிருந்த போதும், உன்னை அழிப்பதற்காக பல வகைகளிலும் எண்ணிக் கொண்டிருந்த கம்சனுடைய எண்ணங்களை பொய்யாக்கியவனே


உன்னை போற்றி பாடுவதற்காக வந்திருக்கிறோம், உன் அருளை எங்களுக்கு தருவாயாக..


உன்னுடைய அருளை பெறுவோமையானால் செல்வமும் வீரமும் பெற்றவர்களாவோம், மேலும் எங்களது கவலைகள் நீங்கி மகிழ்ச்சியடைவோம் என மகளிர்கள் கண்ணபிரானிடம் வேண்டுவது போல் ஆண்டாள் பாடலமைத்திருக்கிறார்.


திருப்பாவை இருபத்து ஐந்தாவது பாடல்:


ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்


   ஒருத்தி மகனாய் ஒளித்து வளர


தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த


   கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்


நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை


   அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்


திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி


   வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய்


ஆண்டாள்:


கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.


பக்தி இயக்கம்:


கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.


மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.


தொடர்ந்து படிக்க: Thiruppavai 24: மார்கழி 24... ” மலையை குடையாக வைத்து தூங்கியவனே... அருள் புரிவாயாக”- ஆண்டாள்..