மார்கழி மாதத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.
பதினாறாவது பாடல் மூலம் தோழிகள் எல்லாம் எழுந்து, கண்ணபிரானுடைய காவலரை எழுப்புவது போல் பாடல் அமைத்த ஆண்டாள், பதினேழாவது பாடல் மூலம், கண்ணனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எழுப்புவது போல பாடல் அமைத்துள்ளார்
பதினேழாவது பாடல் விளக்கம்:
இந்த உலகத்தில், தானம் கேட்போருக்கு, போதும் என்றளவு சொல்ல கூடிய அன்னம் மற்றும் நீர் வழங்க கூடியவனும், தானம் வழங்கி விட்டேன் என்று பெருமை பேசாத மனம் கொண்டவனுமாகிய நந்தகோபனே, எழுந்தருளுவாயாக என்று தலைவனை எழுப்புகிறார்.
அழகான கண்களும், கொடி போல இடை உடையவளும், அழகு படைத்தவளுமான எங்கள் குலத்திற்கே ஒளியாக விளங்கும் யசோதை பிராட்டியே, எழுவீராக என தலைவியை எழுப்புகிறார்.
விண்ணை கிழித்து கொண்டு, உலகை அளந்து தேவர்களின் துயரத்தை தீர்த்தது போல எங்களது துயரையும் தீர்க்க எழுந்து வருவாயாக என காதலனான கண்ணனை ஆண்டாள் எழுப்புகிறார்.
அடுத்ததாக கண்ணனின் அண்ணன் பலதேவரை எழுப்புகிறார். செம்பொன் கழலை அணிந்துள்ள செல்வா,…எழுவீராக.. நீங்களும் உன் தம்பியும் எழுந்து வருவீராக என அழைக்கிறார்.
இப்பாடல் மூலம், கண்ணனை மட்டும் எழுப்பாமல், காவலர், தந்தை நந்தகோபன், தாய் யசோதனை, சகோதரர் பலதேவர் என அனைவரையும் எழுப்புவதன் மூலம், அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார்.
திருப்பாவை பதினேழாவது பாடல்:
அம்பரமே தண்ணீரே
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்!
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே!குலவிளக்கே!
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்கா தெழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கிய நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.
தொடர்ந்து படிக்க: Thiruppavai 16: மார்கழி 16...எந்த தொழில் புரிந்தாலும் மரியாதை கொடுக்க வேண்டும்..அனைவரும் சமம்... உணர்த்தும் ஆண்டாள்
தொடர்ந்து படிக்க: Thiruppavai 4: மார்கழி 4ஆம் நாள்..." வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல" கண்ணனிடம் மழையை கேட்கும் ஆண்டாள்...வியக்க வைக்கும் அக்கால அறிவியல்….