ஐப்பசி மாத தீபாவளியை அடுத்து கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை திருக்கார்த்திகை என்றும் பெரிய கார்த்திகை என்றும் வழங்குகிறார்கள். திருப்பரங்குன்றம் திருகார்த்திகை குறித்து சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
கார்த்திகை விழா
திருப்பரங்குன்ற கோயிலில் பல விழாக்கள் நடைபெற்றாலும் திருக்கார்த்திகை விழா மக்களுக்கு அருளையும் மகிழ்ச்சியையும் தருவது திருக்கார்த்திகை விழா கொடியேற்றம். கார்த்திகைக்கு எட்டு நாட்களுக்கு முன்பே கொடியேற்றத்துடன் திருக்கார்த்திகை விழா தொடங்குகிறது. முதல் ஐந்து நாள்கள் முருகனும் தெய்வானையும் அபிசேகம் அலங்கார ஆராதனை முடித்து திருவீதி உலா வருகின்றனர்.
சைவ சமயத்தை நிறுவிய வரலாறு
ஆறாவது நாளில் சிவன், உமையம்மை, முருகன், தெய்வானை திருவீதி உலா வருகிறார்கள். பதினாறு கால் மண்டபத்திற்கு எதிரில் ஞானசம்பந்தமூர்த்தி எழுந்தருளி சைவ சமயத்தை நிறுவிய வரலாறு திருமுறை ஓதுவார்களால் விளக்கப்பட்டு, பச்சைப் பதிகம் பாடப்படுகிறது. சுவாமிகள் திருவீதி உலா முடித்து கோயில் திரும்புகின்றனர்.
பிச்சாடனராக சிவபெருமான் வீதி உலா
ஏழாம் நாள் சிவன் கங்காளநாதராக பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா வருகிறார். இது தாருகாவனத்து ரிசி பத்தினிகளுக்கு காட்சி கொடுப்பதற்காக நடைபெறுவதாக கூறப்படுகிறது, அன்று மாலை சிவன், உமையம்மை ஒரு சிம்மாசனத்திலும் முருகன் தெய்வானை ஒரு சிம்மாசனத்திலும் திருவீதி உலா வருகிறார்கள். அன்று ஆனந்த ஹோமம் வளர்த்து தீபாராதனை செய்ய இந்த நாள் நிகழ்ச்சி முடிகிறது. ஆடல் வல்லான் தாருகா வனத்து ரிசி பத்தினியர்களின் மோகப் பார்வையில் பட்டு வந்ததால் அதை கழிப்பதற்காக இந்த ஹோமம் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஊடல் உற்சவம் எனும் மட்டை அடித்திருவிழா.
எட்டாம் நாள் காலையில் சிவனும் அம்மனும் வீதியுலா செல்ல அம்மன் மட்டும் கோயிலுக்குள் முதலில் வந்து விடுகிறார். சிவன் பின்னர் தனியாக வருகிறார், இருவருக்கும் ஏற்பட்ட ஊடலால் இது நிகழ்கிறது, இவ்வூடலைத் தீர்க்க சுந்தரமூர்த்தி நாயனார் வருகிறார், இக்கோயில் ஓதுவார் சுந்தரமூர்த்தி நாயனராக வந்து தேவாரம் பாடுகிறார். அவரிடமும் கோபம் கொண்ட அம்மன் அவரை வாழை மட்டையால் அடிக்கிறார். பின்னர் சண்டிகேசுவரர் வந்து ஊடலை தீர்த்து வைத்து, சிவனையும் அம்மனையும் சேர்த்து வைக்கிறார். இதை ஊடல் உற்சவம் என்றும் மட்டை அடித் திருவிழா என்று அழைக்கின்றனர். எட்டாம் நாள் மாலையில் கடவுளர் முருகனும் தெய்வானையும் அலங்காரம் செய்யப்பட்டு ஆறு கால் பீடத்தில் மேடையில் அமர்த்தப்படுகின்றனர்.
பட்டாபிசேக விழா.
அங்கு திருமஞ்சனக்குடம், செங்கோல், கிரீடம், சேவல் முத்திரை ஆகியவை கொண்டு வரப்படுகின்றன. நம்பியார் யானை மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு சுவாமிக்கு தூப தீப ஆராதனையுடன் கிரீடத்தை நம்பியார் கையில் ஏந்தி இருக்க திருமஞ்சனம் நடக்கிறது. கிரீடம் முருகனுக்கு சாத்தப்படுகிறது, செங்கோல், முருகன் கையில் கொடுக்கப்படுகிறது. நிருவாக முத்திரை (சேவல், மயில்) நிருவாக சாவி, பேனா, சுவாமி கையில் வைக்கப்பட்டு தீபாராதனை நடைபெறுகிறது. நம்பியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டு கையில் செங்கோல் கொடுக்கப்படுகிறது. அப்பொழுது நம்பியார் முருகனாக இருப்பதாக நம்பப்படுகிறது. நிருவாக முத்திரை, சாவி, பேனா ஆகியவையும் நம்பியார் கையில் கொடுக்கப்பட்டு மாலை மரியாதை செய்யப்பட்டு, திருவாச்சி மண்டபத்தில் மும்முறை அழைத்து வருகிறார்கள். நம்பியார் கையில் உள்ள செங்கோல் முருகனுக்கு சாத்தப்படுகிறது. பின்னர் சாமியும் அம்மனும் தங்கக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்கள். இது பட்டாபிசேகம் என அழைக்கப்படுகிறது. கார்த்திகைத் திருநாளில் நடைபெறும் பட்டாபிசேகம் சிவபெருமான் தன்னுடைய பொறுப்புகளை முருகனுக்குக் கொடுத்து செய்யும் பட்டாபிசேகமாகக் கருதப்படுகிறது.
கார்த்திகைத் தேரோட்டம்.
ஒன்பதாம் நாள் முருகனும் தெய்வானையும் அபிசேக அலங்கார ஆராதனை முடித்து சின்ன வைரத்தேருக்கு எழுந்தருள்கிறார்கள். ஸ்தானிகர் உள்ளிட்டோருக்கும் அறங்காவலர் நிருவாக அதிகாரிகளுக்கும் மரியாதை செய்யப்படுகிறது. எலுமிச்சம் பழம் பலி கொடுத்து, தேர்ச்சக்கரத்தில் தேங்காய்கள் உடைத்து தேர் புறப்படுகிறது.
தேர் நான்கு ரத வீதிகளில் மட்டும் சுற்றி தேரடி வருகிறது.
அன்று மாலை சுவாமி தங்கமயில் வாகனத்தில் புறப்பட்டு, கோயில் ஆஸ்தான மண்டபத்திற்கு வருகிறார்.
சொக்கப்பனை கொளுத்துதல்.
அங்கு மண் சட்டியில் பாலதீபம் ஏற்றி மூலவர் கருவறைக்கு கொண்டு சென்று தீபாராதனை நடைபெறுகிறது. தீபம் சாமியுடன் பதினாறு கால் மண்டபத்திற்கு வருகிறது, மண்டபத்திற்கு எதிரே உள்ள சொக்கப்பனை என்னும் தீப தண்டத்தில் தீபம் வைத்து, கொளுத்தப்படுகிறது.
மலைமேல் தீபம்.
கார்த்திகைத் திருநாளில் குன்றின் மேல் தீபம் ஏற்றி வைத்து அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கண்டு வணங்குவதும் இரசிப்பதும் தனி அழகு. முருகன் கோவிலில் சொக்கப்பனை கொளுத்திய பிறகு மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றி வைக்கப்படுகிறது. பொதுமக்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றி வைக்கின்றனர். சொக்கப்பனை தீயின் கருக்கு சாமிக்கு சாத்தப்படுகிறது, பின்னர் பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. இக்கார்த்திகைத் திருவிழாவில் முதல் எட்டு நாள்கள் மக்கள் பங்கேற்பு மிக மிகக் குறைவாகவும். ஒன்பதாம் நாள் திருக்கார்த்திகை அன்று சுற்றுப்புற கிராம மக்கள் மதுரை நகர் மக்கள் பெருவாரியாகவும் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். மேளதாளத்தோடு முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா எனும் முழக்கங்கள் முழங்க திருக்கார்த்திகைத் திருவிழா கண்கொள்ளா காட்சியாக காட்சியளிக்கிறது.