ராமன் வணங்கிய பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரி ஈஸ்வரர் மலை கோவிலில் உள்ள வரலாற்று புராதன சின்னங்களை ஆய்வு செய்து பாதுகாக்கவும், சுற்றுலா தலமாக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவிலேயே 1000 வருடம் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றானது தீர்த்தகிரிஸ்வரர் ஆலயம். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமமலையில் அமைந்துள்ளது. தீர்த்தமலையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் திருத்தலமான தீர்த்தகிரி ஈஸ்வரர் திருக்கோவில் தரப்பகுதியிலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மலையிலிருந்து ஒரே அளவில் தண்ணீர் வருவது இதன் சிறப்பு அம்சமாகும்.
தீர்த்தமலையில் மேற்கே வாயு தீர்த்தம், வருணதீர்த்தமும் அமைந்துள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தமும், வடக்கில் அனுமந்தீர்த்தமும், தெற்கில் எம தீர்த்தமும் அமைந்துள்ளன. தீர்த்தமலையின் உச்சியில் வசிஷ்ட தீர்த்தம் உள்ளது. இது தவிர தீர்த்த மலையில் ராமர், கௌரி, அகஸ்தியர், அக்னி, அகஸ்திய உள்ளிட்ட 5 தீர்த்தங்கள் என மொத்தம் 11 தீர்த்தங்களையும், 11 சருக்கங்களையும் கொண்ட சிவ ஸ்தலம். இந்த தீர்த்தங்கள் அதிசயமிக்க மலையில் உள்ள பாறைகளின் இடுக்குகளிலிருந்து உருவாகி வருகிறது. இது எங்கு உருவாகின்றது என்பது யாராலும் அறியமுடியவில்லை. மேலும் அதிகப்படியான மழை மற்றும் கடும் வறட்சி என எந்த பருவநிலையாக இருந்தாலும் வருகின்ற தீர்த்தத்தின் அளவு, அதிகரிக்காமலும், குறையாமலும் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இந்த தீர்த்தங்கள் மூலிகை குணம் கொண்டவை.
தீர்த்தமலையில் உள்ள தீர்த்தங்களில் குளித்தால் பினி நீங்கி, உடல் ஆரோக்கியம் பெறும் என்பதாலும், பாறைகளின் இடுக்குகளில் வரும் தீர்த்தத்தினை கண்டு இரசிக்கவும் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்பதால், தோஷம் களிக்கவும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் ஏராளாமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மலைக்கு செல்ல சுமார் 7 கி.மீ தூரம் நெட்டுகுத்தாக நடந்து செல்ல வேண்டும். இதனால் மலையின் நடைபாதையில், படிகட்டுகள், மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைக்கபட்டுள்ளது. மேலும் மலையில் நடக்க முடியாதவர்கள் வழியில் அமர்ந்து, சிறிது ஓய்வெடுக்க நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவ ஸ்தலத்திற்கு புனித நீரடவும், சாமி தரிசனம் செய்யவும் தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அதில் அமருவதற்கு இருக்கைகள் இல்லை, தாகத்திற்கு வழியில் குடிநீரும் இல்லை. மனிதர்கள் மட்டுமல்லாது அங்குள்ள குரங்குகளுக்கு கூட குடிப்பதற்கு தண்ணீர் கிடைப்பதில்லை. மலை உச்சியில் கோவிலில் வரும் தீர்த்தங்களில் குளிக்க கட்டாயமாக நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்து அறநிலைய துறை சார்பில் கட்டணம் வசூல் கிடையாது. ஆனால் கட்டணம் செலுத்தவில்லை என்றால் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. கோவிலில் உள்ள தீர்த்தகிரி ஈஸ்வரர் மற்றும் வடிவாம்பிகை சாமி தரிசனம் செய்யும் இடத்தில் தேங்காய், மாலை, அர்ச்சனை செய்தல் மற்றும் முடி காணிக்கை செய்ய மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் முடி காணிக்கை செலுத்துமிடத்தில் அரசு கட்டணம் இல்லாமல், தனியாக ரூ.40 வசூல் செய்யப்படுகிறது.
அதோடு மட்டுமில்லாமல், பெண்கள் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்கு போதிய இடவசதி இல்லை, பெண்களுக்கு குழியலறையும் கழிவறையும் இருந்தும் உரிய பராமரிப்பின்றி இருந்து வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் வெளியூர்களிலிருந்து சிலர் இரவு நேரங்களில் வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பாக வந்து செல்ல மின்விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் கோவில் மூடியிருப்பதால், வந்து சாமி தரிசனம் செய்ய முடியாமல் சிலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் பொதுமக்களின் நலன் கருதி இந்து அறநிலைய துறையினர், குடிநீர், சாலை, மின்சாரம், கழிவறை மற்றும் பெண்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும், 24 மாணி நேரமும் கோவில் திறந்து பூஜை செய்யவும், பொதுமக்களிடம் கட்டாய கட்டண வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தீர்த்தமலை உச்சி வரலாறு
இந்த சிவ ஸ்தலம் ராஜாக்கள் காலத்தில் கட்டப்பட்டது. இதில் சேர, சோழ, பண்டியர் என்பது போல பல்லவர் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இறுதியாக சீல நாயக்கர் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த மலை கோவிலிலிருந்து சுமார் 3 கி.மீ தூரம் மலையின் உச்சியில் மக்கள் வந்து தங்குவதற்கு ஏதுவாக, கிணறு வெட்டி, வெள்ளி பொருட்களை உருக்கி கிணற்றுக்குள் ஊற்றி, வெள்ளி கிணறு உருவாக்கியுள்ளானர். மேலும் கருங்கல் கோட்டை, செங்கல் கோட்டை கட்டப்பட்டுள்ளது. ஆனால் தற்பொழுது அந்த கிணற்றிலிருந்து உலோகங்கள் முழுவதும், கடத்தப்பட்டு கிணறு பாழடைந்துள்ளது. இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்தற்கு அடையாளமும், கருங்கல், செங்கல் கோட்டைகள் இடிந்துள்ளது. அதப்போல் மலை உச்சியில் உள்ள பாறையில் சப்தகன்னிகள் என்று சொல்லக் கூடிய 7 கன்னிமார்கள் சிலையாக வடிக்கப்படாமல், வியூகமாக காணப்படுகிறது. இது இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்பு தெய்வமாக வணங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது.
மேலும் மலையில் உச்சியில் பிள்ளையார் சிலை இருந்துள்ளது. உச்சி பிள்ளையார் சிலயருகில் வசிஸ்ட தீர்த்தம் என்ற ஒரு தீர்த்தம் சொட்டு சொட்டாக வருகிறது. இந்த தீர்த்தம் செய்த பாவ புண்ணியங்களுக்கேற்ப கிடைக்கும் என சொல்லப்படுகிறது. நாளடைவில் மலையின் உச்சியில் இருந்த பிள்ளையார், கிழே விழுந்ததால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தற்பொழுது புதியதாக பிள்ளையார் சிலை பிரதிஸ்டம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து உச்சி பிள்ளையார் சிலைக்கு அருகில் பாம்பாட்டி சித்தர் குகை உள்ளது. இந்த குகைக்குள்ள் செல்ல வேண்டுமென்றால், நுழைவாயில் மிகவும் குறுகலாக இருப்பதால், படுத்து, வளைந்து, நெளிந்து பாம்பை போல ஊர்ந்து சுமார் 20 அடி தூரத்திற்கு செல்ல வேண்டும். அதற்குள்ளே சென்றால், சுமார் 20 பேர் அமரக்கூடிய வகையில் மடம் உள்ளது. இந்த மடத்தில் சித்தர் வாழ்ந்ததால், இதற்கு பாம்பாட்டி சித்தர் குகை என்று சொல்லப்படுகிறது. அதன்ருகில் அகத்தியரும் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், ஒரு நாள் முழுவதும் பயணம் செய்ய வேண்டும்.
இந்த தீர்த்தகிரி புராணம், திருவண்ணாமலை புரணத்தை சைவ எல்லப்பநாதர் உரை எழுதியுள்ளார். அருணகிரி நாதர் பாடப்பட்ட சிவ ஸ்தலம். மலைக் கோவில் தீர்த்தம், மூர்த்தி, தலம் மூன்றிற்கும் விஷேசம், கீழ் கோவில் உற்சவங்களுக்கு விஷேசம். மிகவும் புராதனமானது இந்த சிவ ஸ்தலம். இதில ராமன், இலட்சுமணன் இருவரும் பிரம்மஸ்தி தோஷம் நீங்குவதற்காக ஒவ்வொரு சிவ ஸ்தலமாக நீராடி வரும்போது, அகத்திய முனிவரால், இந்த ஸ்தலம் இராம பிராணுக்கு எடுத்து சொல்லப்பட்டு, இராமன், இலட்சுமணன் வந்து, மாசி மக நட்சத்திரத்தில் சிவ பூஜை செய்து, பிரமத்தி தோஷம் நீங்க, அதாவது உயிர்களை சம்ஹாரம் செய்த பாவங்கள் நீக்கி புனித தன்மை பெற்றுள்ளனர். இந்த தினத்தில் தான் ஆண்டுதோறும் மாசி மக நட்சத்திரத்தில் தேர்த்திருவிழாவிற்கு கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து 7 வது நாளில் மாசி மக தேர் திருவிழா உற்சவம் நடைபெறுகிறது.
இவ்வாறு வரலாற்று புராதனமான நினைவு சின்னங்களை கொண்ட தீர்த்தமலை உச்சியில் தொல்லியில் துறை ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழரின் தொன்மைகளை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிவ ஸ்தலத்தில் வரலாற்றை பின்வரும் சந்ததிகள் அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த சிவ ஸ்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, இதனை சுற்றுலா தலமாக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.