நீலகிரி மாவட்டம் குந்தா அருகேயுள்ள எமரால்டு பகுதியில் ஸ்ரீ பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருத்தேர் திருவிழா 5 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர் திருவிழா கடந்த 16 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் துவங்கிய இந்நிகழ்ச்சியில், அபிஷேக ஆராதனைகளுடன் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தல் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கோத்தகண்டி மட்டம் மகேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து தேர் பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம், தீர்த்தகுடம், மாவிளக்கு, பூங்கரங்களுடன் அக்னி சட்டிகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதையடுத்து பால நாக முத்து மாரியம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன், உறியடித்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், பெண்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. நிறைவு நாளான்று மறுபூஜை மஞ்சள் நீராட்டு, முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் கிடா வெட்டு விருந்துடன் நிறைவு பெற்றது.
இதனிடையே பால நாக முத்து மாரியம்மன் திருக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, அக்கோவிலின் முன்பு வரவேற்பு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் வாழைமர பந்தலின் முகப்பில் இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் ஆகிய 3 மதங்களின் சின்னங்கள் கொண்ட பலகைகள் வைக்கப்பட்டு இருந்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த எழுத்தாளர் விஜயராஜ் சோழன் என்பவர் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஆண்டுதோறும் பால நாக முத்து மாரியம்மன் கோவில் தேர் திருவிழா 5 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு எமரால்டு மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வர். இந்தாண்டு நடந்த திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். இப்பகுதியில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் கணிசமான அளவில் வசித்து வருகின்றனர்.
இந்த கோவில் திருவிழாவிற்கு கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் வந்து செல்வது வழக்கம். அதனால் மத நல்லிணக்கம் அடிப்படையில் 3 மதங்களைச் சேர்ந்தவர்களையும் வரவேற்கும் வகையில் இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் ஆகிய 3 மத சின்னங்களையும் வரவேற்பு பலகை வைத்துள்ளோம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 3 மத சின்னங்களையும் வரவேற்பு பலகையில் வைத்து வருகிறோம். அவர்களது மத விழாக்களில் நாங்கள் பங்கேற்போம். எங்களது மத விழாக்களில் அவர்கள் பங்கேற்பார்கள். 3 மதத்தினரும் சகோதாரத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். அதை வெளிகாட்டும் வகையிலும் மத நல்லிணக்கம் அடிப்படையிலும் இந்த வரவேற்பு பலகை வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்