திருவண்ணாமலை: பௌர்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகள் வசதிக்காக, விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பௌர்ணமி கிரிவல நேரம்: ஆகஸ்ட் 8, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:45 மணிக்கு முழு நிலவு தொடங்குகிறது - ஆகஸ்ட் 9, 2025 சனிக்கிழமை பிற்பகல் 2:18 மணிக்கு முழு நிலவு முடிவடைகிறது.

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்தில் அதிகளவில் பக்தர்கள் பங்கேற்பர்கள். இதையொட்டி பக்தர்கள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

இதன்படி, விழுப்புரத்திலிருந்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 9.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130), முற்பகல் 11.10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்குச் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் அதே நாளில் பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் திருவண்ணாமலை -விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129), பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரு ரயில்களும் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கிரிவலம்

கிரிவலம் என்பது "கிரி" (மலை) மற்றும் "வலம்" (சுற்றுதல்) ஆகிய வார்த்தைகளின் சேர்க்கையாகும். அதாவது, புனித மலையைச் சுற்றி வருவது கிரிவலம் எனப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவலம், அண்ணாமலையாரை வலம் வந்து வழிபடுவதாக நம்பப்படுகிறது, மேலும் இது எதிர்மறை எண்ணங்களை நீக்கி, தெய்வ அருளைப் பெற உதவும் என்றும் கருதப்படுகிறது.  பெளர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைச் சுற்றி செய்யப்படும் கிரிவலம் மிகவும் பிரபலமானது. இங்கு பௌர்ணமி அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதன் மூலம் மோட்சம் பெறலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

அக்னி லிங்கம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அக்னி லிங்கமாக விளங்குகிறது. இங்கு கிரிவலம் செய்வதால் ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும்.

பஞ்சபூத தலம்: திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் ஒன்று. இங்கு கிரிவலம் செய்தால் ஐம்பூதங்களின் சக்தியை நம்முள் உணர முடியும்.

பிரம்மஹத்தி தோஷம்: பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் அருணாச்சலத்தில் கிரிவலம் செய்வதால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.