தஞ்சாவூர்: தஞ்சாவூர் என்றாலே ஆன்மீகமும், பெரிய கோயிலின் பிரமாண்டமும்தான் நினைவுக்கு வரும். இப்போது திருவண்ணாமலை கோயிலை போன்று நடக்கும் கிரிவலம்தான் பக்தர்களின் ஞாபகத்தில் வருகிறது. அந்தளவிற்கு கிரிவலத்தை பிரபலப்படுத்திய பெருமை தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளையே சாரும். அவர்கள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜத்தையும், தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலியையும் கூறுகின்றனர்.  பொதுவாக பௌர்ணமி கிரிவலம் என்றால் அது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் கிரிவலத்தையே குறிப்பிடுவதாகும். அம்பிகைக்கு உகந்த பௌர்ணமி நாளில் சிவபெருமானை மட்டுமே மனதில் நினைத்து அவருடைய திருப்பெயரை உச்சரித்துக் கொண்டு பொறுமையாகவும், அமைதியாகவும் நடந்து செல்வதன் மூலம் சிவபெருமானின் ஆசி நேரடியாக கிடைப்பதோடு, பாவங்கள் நீங்கி சகலதோஷங்கள் விலகும் என்பது ஐதீகம், பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Continues below advertisement

இந்த சிறப்பு வாய்ந்த நாளில் சிவபெருமானின் அருளைப் பெற திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுப்பது வழக்கம். விடிய விடிய நடக்கும் இந்த கிரிவலத்தில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருவண்ணாமலை கிரிவலத்திற்கு கிடைக்கும் பெயர் போன்று தற்போது தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடந்து வரும் கிரிவலம் பெயர் பெற்ற ஒன்றாக மாறி வருகிறது.  ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிய கோயிலில் ஏற்கனவே கடந்த 2012ம் ஆண்டு கிரிவலம் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

அதன் பிறகு பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்த ஒரு ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி ஆகியோரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். உடன் இதை ஏற்பாடு செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்த போது சிறப்பாக செய்து விடலாம் என்று முடிவு செய்து மாநகராட்சி அலுவலர்களை களமிறக்கி உள்ளார் மேயர் சண்.ராமநாதன், 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலைப் போல மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாளன்று மாலை 5 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரையும் கிரிவலம் நடத்த முடிவு செய்யப்பட்டது‌. கிரிவலப் பாதைக்காக பெரிய கோயிலை சுற்றி உள்ள நடைபாதைகளை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களை கொண்டு சீரமைக்கப்பட்டது. முள் செடிகள், நடந்து செல்லும் பாதையில் இருந்த பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டு குடிநீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில் புரட்டாசி முதல் பௌர்ணமி நாளான கடந்த செப்டம்பர் 17ம் தேதி பெரிய கோயிலில் வெகு விமர்சையாக கிரிவலம் துவங்கப்பட்டது.

பொதுவாக பெரிய கோயிலுக்கு இரவிலும் கூட தினம் தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த நிலையில் முதல் பௌர்ணமி கிரிவலம் நாளிலே முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குவிந்து விட்டனர்.  கிரிவலப்பாதையில் பக்தர்கள் பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். சாலை வழியாக கோயிலை வந்து சேரும் பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பேரிகார்டு அமைக்கப்பட்டது. 30 ஆயிரம் பக்தர்கள் முதல் கிரிவலத்திற்கே திரண்டது பிரமாண்டமான ஒன்றாகும். இதன் பின்னணியில் அனைவரின் கடினமான உழைப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்தவும், கிரிவல பாதையை மேலும் தரம் உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில்,  “நாங்கள் திடீர் முடிவில் இதை செயல்படுத்தியுள்ளோம். கோயிலை சுற்றியும் இருந்த புல்,பூண்டு, புதர்களை 100 மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் புல்டோசர் ஆகியவற்றை கொண்டு சரி செய்யப்பட்டது. கோயிலை சுற்றிலும் வாய்க்கால்கள், ஆறுகள் இருப்பதால் முழுவதும் கம்பி வேலிகள் கொண்டு  அடைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மாலை 5 மணி முதல் காலை 6 மணி வரை நீண்ட நேரம் பக்தர்கள் கிரிவலம் செல்வதால் அவர்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தியுள்ளோம். போக்குவரத்து பாதை மாற்றம் செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெரிய கோயிலில் கிரிவலம் நடக்கிறது என்பதை தஞ்சை மாநகர், பைபாஸ் சாலை, செங்கிப்பட்டி, வல்லம், ஒரத்தநாடு, கும்பகோணம் உட்பட பல பகுதியில் பிளக்ஸ் வைத்தும், வாகனங்களில் ஒலிப்பெருக்கி வைத்து அறிவிப்பு செய்ய வைத்தோம். இதனால் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டத்திலிருந்து பக்தர்கள் வந்து குவிந்து விட்டனர். நாங்கள் நினைத்தது பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று ஆனால் முதல் இரவு 9 மணிக்கே கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்தனர்.

மேலும் மொத்தமாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர். இனி அனைத்து மாதங்களிலும் வரும் பௌர்ணமி தினத்தன்று கிரிவலமானது நடைபெறும். அடுத்தடுத்த பௌர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

வரும் காலங்களில் 50 ஆயிரம் பக்தர்கள் வருகைக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் வரும் பாதையில் அமர்ந்த செல்ல இருக்கை வசதி, நடந்து செல்லும் பாதையில் வலுவான தளம் அமைக்க கிரானைட் கல் கொண்டு அமைக்க தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் இது குறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி மத்திய அரசிடம் இருந்து ரூ.25 கோடி நிதிக்கு ஏற்பாடு செய்துள்ளார். 

அந்த நிதியிலிருந்து கிரிவலம் பாதையில் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட உள்ளது. தஞ்சை கிரிவலம் இந்தளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது என்றால் அதற்கு திராவிட மாடல் நாயகர் முதல்வர் அவருக்கும், மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் எம்.பி., ச.முரசொலி, மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர், அரசு அதிகாரிகள் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் ஒத்துழைப்புதான் இந்த ஆன்மீக வெற்றிக்கு முக்கிய காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.