தைப்பூச திருநாளானது தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த திருநாளில் பக்தர்கள் முருக பெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.  


தைப்பூசம்:


தை மாதம் 22ம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி காலை முதலே இந்த நட்சத்திரம் இருப்பதால் அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.


இந்த தைப்பூச தினத்தை முன்னிட்டு முருக பக்தர்கள் 48 நாட்கள் விரதமிருந்து முருகனை வழிப்படுவர். மார்கழி மாதம் தொடங்கும் இந்த விரதமானது தைப்பூசம் வரை நீடிக்கும்


தைப்பூச வரலாறு:


தைப்பூச நாளில்தான் இந்த உலகத்தில் முதல்முறையாக நீர் தோன்றியதாகவும், அதிலிருந்துதான் பூஞ்சை, புல், கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் தோன்றியதாக முன்னே முன்னோர்கள் எழுதிவைத்த புராணங்களும், சாஸ்திரங்களும் கூறுகின்றன. அதேபோல், தைப்பூச நாளில்தான் முருகப் பெருமான் தனது தந்தையான சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசமாக வழங்கினார். இதன்மூலம்தான் தந்தைக்கு பாடம் சொன்ன முருகன் என்ற பெயர் வந்தது. 


முருகன் தனது தாயான பராசக்தியிடம் வேல் வாங்கி நின்ற தினம் இன்றுதான். மேலும், அகத்தியருக்கு முருக பெருமான் தமிழை கற்பித்ததும், சிதம்பரம் நடராஜர், பிரம்மா, விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு காட்சி கொடுத்ததும் இதே தைப்பூச நாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. 


விரதமிருப்பதால் கிடைக்கும் பலன்கள்:


தைப்பூசத்தன்று விரதம் இருந்து முருக பெருமானை வழிபடுவதால் நம் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். குழந்தை ஆயுள், திருமண யோகம், குடும்ப ஒற்றுமை என அனைத்தும் கைக்கூடும் என்பது நம்பிக்கை. 


தைப்பூச விரதம் (Thaipusam Fasting):


4-ம் தேதி மாலை தைப்பூச திருவிழா தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினம் பௌர்ணமி இல்லை. அடுத்தநாள் 5-ந் தேதிதான் பௌர்ணமி உள்ளது. அன்றைய தினம்தான் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. சிலர் திதியை வைத்து 4ஆம் தேதி என கூறுகின்றனர், ஒரு சிலர் நட்சத்திரம் வைத்து பிப்.5ஆம் தேதி என்கின்றனர்.


பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. இரவு முருகனுக்கு என்ன பலகாரம் அல்லது நெய்வேத்தியம் செய்யப்படுகிறதோ அதே நெய்வேத்தியத்தை நாமும் உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும்போது நடுவில் பசித்தால் முருகப்பெருமானுக்கு படைக்கின்ற பால் பழங்களை சாப்பிட்டுக்கொள்ளலாம்.