Thaipusam Festival 2025: தமிழ் கடவுள் என்று பக்தர்களால் போற்றி வணங்கப்படும் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக தைப்பூசம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நன்னாள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று தைப்பூசம்:
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தைப்பூசம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 5ம் தேதியே தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு முருகன் ஆலயங்கள் களைகட்டத் தொடங்கியது. இந்த நிலையில், இன்று தைப்பூசம் என்பதால் காலை முதலே முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான முருகன் தங்கத்தேரில் உலா வரும் நிகழ்வு பழமுதிர்ச் சோலை உள்ளிட்ட பல முருகன் கோயில்களில் நிறைவு பெற்றுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, மருதமலை, திருத்தணி, பழமுதிர்ச் சோலைகள் தைப்பூசத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. முருகன் கோயில்களில் காலை முதல் கந்தனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணைப் பிளந்து வருகிறது.
லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்:
குறிப்பாக, திருச்செந்தூர் மற்றும் பழனியில் கடந்த சில நாட்களாகவே லட்சக்கணகக்கில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர். இந்த அறுபடை வீடுகள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். மேலும், காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து பால்காவடி எடுத்து வருகின்றனர்.
சமீபத்தில் சர்ச்சை ஏற்பட்ட திருப்பரங்குன்றத்திலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு குழந்தை வரம் வேண்டி, திருமண வரம் வேண்டி, நல்ல வேலை வேண்டி பல பக்தர்களும் கோயில்களில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களில் வழக்கத்தை விட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு:
பழனியில் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பழனியில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு 3 நாட்கள் இலவச பேருந்து சேவை நேற்று தொடங்கியது. இதனால், ஏராளமான பக்தர்கள் பயன் அடைந்துள்ளனர். திருச்செந்தூரிலும் பக்தர்கள் அதிகளவு குவிந்து வருவதை முன்னிட்டு அங்கு கடலில் பக்தர்கள் நீராடும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏராளமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வடபழனி முருகன் கோயிலில் நேற்று மாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். இன்று காலை முதலே ஆயிரக்கணக்கில் முருகப்பெருமானைத் தரிசிக்க குவிந்து வருகின்றனர்.
வெளிநாட்டிலும் கொண்டாட்டம்:
தமிழ்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் கோயில்களிலும் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகனுக்கு பால், நெய், திருநீர், இளநீர் என பல அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.
பூக்கள், பழங்கள் வரத்து அதிகரிப்பு
தைப்பூசம் காரணமாக காய்கறிகள், பூக்கள், பழங்களின் வரத்து சந்தைகளில் அதிகளவு காணப்படுகிறது. மேலும், பூக்களின் விலை விசேஷத்தை முன்னிட்ட அதிகரித்து காணப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இன்று தைப்பூசம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.