வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகனுக்கு சிறப்பு தீப ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் தைப்பூச விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த மாதமாக தை மாதம் விளங்கி வருகிறது. தை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் அல்லது அந்த தினத்தையொட்டி உள்ள பூச நட்சத்திரத்தில் வருவது தைப்பூசம் ஆகும். எல்லா ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்படும். மதுரையில் திருப்பரங்குன்றம் மற்றும் பழமுதிர்சோலை என இரண்டு ஆறுபடை வீடுகளும் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புமிக்க, பழமை வாய்ந்த முருகன் கோயில்கள் உள்ளன. இந்நிலையில் அழகர் மலை மீது அமைந்துள்ள முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்சோலையில் தைப்பூசத் திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- Thaipusam 2024: தைப்பூசம் தினத்தில் சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோயில்களை தெரிந்து கொள்ளுங்கள்
அழகர் கோவில் மலை மீது தமிழ் கடவுள் முருகனின் ஆறாவது படை வீடான பழமுதிர்சோலை கோயில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூச திருவிழா கடந்த 16- ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் முருகன் வள்ளி தெய்வானையுடன், அன்ன வாகனம், சிம்மவாகனம், ஆட்டுக்கிடாய், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை அஸ்திரதேவர் எனும் வேலுக்கு ஆறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோவிலின் வடபுறத்தில் அமைந்துள்ள தீர்த்தத் தொட்டியில் நூபுர கங்கை தீர்த்தம் நிரப்பப்பட்டு அதில் வேலுக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி கோயில் அர்ச்சகர் முத்துக்குமாரசுவாமி தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. அப்போது கூடியிருந்த சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமியை தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய முருகனுக்கு சிறப்பு தீபஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.