முருகப் பெருமானுக்கு மிக உகந்த நாளான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் பக்தர்கள் அலைகடலென குவிவது வழக்கம். முருகப் பெருமானுக்கு உரிய அறுபடை வீடுகள் மட்டுமின்றி மற்ற முருகப்பெருமான் ஆலயத்திலும் பக்தர்கள் குவிவது வழக்கம். தைப்பூசத்திற்காக முருக பக்தர்கள் மாலை அணிந்து நேர்த்திக்கடன் செல்வதும் வழக்கம் ஆகும். பல பக்தர்களும் காவடி எடுத்து முருகப்பெருமானுக்கு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவார்கள்.


காவடிகளிலே பல வகை காவடிகள் உண்டு. அவை என்னென்ன? என்பதை கீழே காணலாம்.


தீர்த்த காவடி:


கரூர் மாவட்டத்தில் உள்ள கொடுமுடியில் இருந்து புனித நீராக கருதப்படும் காவிரியில் இருந்து பக்தர்களால் பாத யாத்திரையாக முருகன் கோயில்களுக்கு கொண்டு வரப்படும் தீர்த்தம் காவிரி தீர்த்தம் ஆகும். சிலர் அவரவர் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து தீர்த்தத்தை முருகன் கோயிலுக்கு கொண்டு செல்வார்கள்.


பறவை காவடி:


காவடிகளில் மிகவும் பிரபலமான காவடி பறவை காவடி ஆகும். முருகனை நினைத்து அலகு குத்தி ஆகாயத்தில் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் வருவது பறவை காவடி ஆகும்.


மயில் காவடி:


முருகப்பெருமானின் வாகனமாக கருதப்படுவது மயில். மயிலின் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் சுமந்து வருவதே மயில் காவடி ஆகும்.


பால் காவடி:


முருக பக்தர்களால் காவடிகளில் அதிகளவு எடுக்கப்படும் காவடி பால்காவடி ஆகும். ஒரு செம்பில் அல்லது கலசம் போன்ற குடத்தில் பாலை எடுத்து தலையில் வைத்து பாத யாத்திரையாக செல்வார்கள்.


சந்தன காவடி:


உடல் முழுவதும் சந்தனத்தை பூசி காவடி எடுத்து வருதல் சந்தன காவடி ஆகும்.


வேல் காவடி:


உடலில் ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது உடல் முழுவதும் பெரிய அளவிலோ, சிறய அளவிலோ வேல் குத்தி நேர்த்திக்கடன் செல்வதே வேல் காவடி ஆகும்.


அன்னக்காவடி:


அன்னம் என்றால் உணவு. காவடியில் உணவு கட்டிகொண்டு வந்து இறைவனுக்கு படைக்கப்படும் காவடியே அன்னக்காவடி ஆகும். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக பக்தர்கள் அன்னக்காவடி எடுக்கின்றனர்.


சர்ப்பகாவடி:


முருகனுக்கு எடுக்கப்படும் காவடிகளில் ஒன்று சர்ப்பகாவடி. பாம்பை ஒரு பெட்டியில் உப்பு போட்டு அடைத்து, அதை காவடியுடன் சேர்த்து முருகன் கோயிலுக்கு கொண்டு செல்லும் காவடியே சர்ப்பகாவடி ஆகும். முன்பு அடிக்கடி எடுத்து வரப்பட்ட சர்ப்ப காவடி, தற்போது குறைந்த அளவே கொண்வு வரப்படுகிறது.


அக்னி காவடி:


அக்னி காவடி என்பது பெரும்பாலான பக்தர்கள் எடுக்கும் காவடி ஆகும். உடலில் அலகு குத்தி அந்த அலகில் பூச்சட்டி ( தீச்சட்டி) ஏந்தி உலா வருவது அக்னி காவடி ஆகும். இந்த அக்னிச்சட்டியில் வைக்கப்படும் அக்னிச்சட்டிகளின் எண்ணிக்கை மாறும். சிலர் 108 அக்னிசட்டிகள் ஏந்தி வருவார்கள்.


இளநீர் காவடி:


முருகனுக்கு எடுக்கப்படும் காவடிகளில் மற்றொரு காவடி இளநீர் காவடி ஆகும். தென்னை மரத்தில் இருந்து இளநீர் பறித்துக் கொள்வார்கள். தென்னை மரத்தில் இருந்து பச்சை மட்டை ஒன்றையும் பறித்துக் கொள்வார்கள். அந்த பச்சை மட்டையை ஒரு காவடியின் கைப்பிடி போல உருவாக்குவார்கள். மொத்தம் நான்கு இளநீர் பறித்துக் கொள்வார்கள். இரண்டு இளநீர்களை ஒரு புறமும், மற்ற இரண்டு இளநீர்களை மற்றொரு புறமும் கட்டிக்கொண்டு காவடியாக சுமந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.


புஷ்ப காவடி:


பெரும்பாலான பக்தர்கள் எடுக்கும் காவடிகளில் புஷ்ப காவடியும் ஒன்றாகும். காவடி நடுவில் முருகப்பெருமான் திருவுருவப் படம் வைத்து, மலர்களால் அலங்கரித்து கோயில்களுக்கு சுமந்து செல்வார்கள். இதுவே புஷ்ப காவடி ஆகும். இந்த காவடி வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படும்.


இதுபோன்று பல வகையான காவடிகள் தைப்பூச திருநாளில் பக்தர்களால் நேர்த்திக்கடனாக சுமந்து முருகன் கோயில்களுக்கு கொண்டு செல்லப்படும்.