தமிழ் கடவுள் என்று கொண்டாடப்படும் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுவது தைப்பூசம் ஆகும். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் இணைந்து வரும் நாளே தைப்பூசம் ஆகும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் வரும் 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தைப்பூச நன்னாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.  அறுபடை வீடுகள் எது? எது? என்பதை கீழே விரிவாக காணலாம்.


திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி மற்றும் பழமுதிர்சோலை ஆகிய 6 தலங்களும் முருகனின் அறுபடை வீடுகள் ஆகும்.


திருப்பரங்குன்றம்:


அறுபடை வீடுகளில் முதல் வீடாக திகழ்வது திருப்பரங்குன்றம் முருகன் கோயில். இங்கு தெய்வானையுடன் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். மதுரை மாவட்டத்தில்  அமைந்துள்ளது திருப்பரங்குன்றம். திருமணம் ஆகாதவர்கள் இங்கு சென்று கல்யாண மாலையை முருகனுக்கு சாத்தினால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். திருப்பரங்குன்றம் மலையானது சிவன் மலை வடிவத்தில் காட்சி தருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.


திருச்செந்தூர்:


முருகனின் இரண்டாவது அறுபடை வீடு திருச்செந்தூர். திருச்செந்தூருக்கு திருச்சீரலைவாய், ஜெயந்திபுரம் என்று மற்றொரு பெயரும் உள்ளது. சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்த இடம் திருச்செந்தூர் என்று புராணங்கள் கூறுகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ளது இது மட்டுமே ஆகும். இது தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது.


பழனி:


முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடு பழனி. போகர் சித்தர் நவபாஷண சிலையால் உருவாக்கிய முருகன் சிலை இங்கு உள்ளது. முருகப் பெருமான் ஆண்டிக்கோலத்தில் இந்த மலை மீது காட்சி தந்ததால், இங்குள்ள முருகப்பெருமான் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அறுபடை வீடுகளிலே பழனியில் மற்ற அறுபடை வீடுகளை காட்டிலும் அதிகளவு பக்தர்கள் குவிவார்கள். திண்டுக்கல் மாவட்டத்திற்கு அடையாளமாக பழனி விளங்குகிறது. பழனிக்கு திருவாவினன்குடி என்ற மற்றொரு பெயரும் உள்ளது.


சுவாமிமலை:


தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது சுவாமி மலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில். இது அறுபடை வீடுகளில் நான்காவது அறுபடை வீடாகும். முருகப் பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தில் பொருளை கூற, அதை சிவபெருமான் சீடனாக அமர்ந்து முருகப்பெருமானை குருவாக ஏற்றுக் கேட்ட இடமே சுவாமிமலை என்று புராணங்கள் கூறுகிறது. இதன் காரணமாகவே, இங்குள்ள முருகனுக்கு சிவகுருநாதன் என்றும் பெயர் உண்டு. சுவாமிமலைக்கு திருவேரகம் என்று மற்றொரு பெயரும் உண்டு.


திருத்தணி:


முருகப்பெருமானின் 5வது படை வீடு திருத்தணி ஆகும். திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி அமைந்துள்ளது. திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் தன்னுடைய கோபத்தை வந்து தணித்துக் கொண்ட இடமே தணிகை என்றும், திருத்தணி என்றும் பொருள்படுவதாக இந்த தலத்தின் புராணம் கூறுகிறது. இங்குதான் முருகப்பெருமான் வள்ளியை தனது அண்ணன் விநாயகரின் உதவியுடன் திருமணம் செய்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. அருணகிரி நாதர், முத்துச்சாமி தீட்சிதர் உள்ளிட்ட முருக பக்தர்கள் இங்கு பாடியுள்ளனர்.


பழமுதிர்சோலை:


மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது பழமுதிர்சோலை ஆகும். முருகப்பெருமானின் கடைசி அறுபடை வீடு பழமுதிர்சோலை ஆகும். ஒளவையாரிடம் சுட்டபழம் எது? சுடாத பழம் எது? என்ற திருவிளையாடலை முருகன் நிகழ்த்தியது இந்த தலம் என்றே புராணங்கள் கூறுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் மலை மீது அமைந்துள்ளது பழமுதிர்சோலை ஆகும்.


இந்த 6 தலங்களிலும் தைப்பூச தினத்தன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.


மேலும் படிக்க: Thaipusam 2024 : தைப்பூச விழா : திருப்போரூர் கந்தசாமி கோவிலில் கோலாகலம்.. நாள் முழுவதும் அன்னதானம்..


மேலும் படிக்க: Thaipusam 2024: சந்தன காவடி முதல் சர்ப்ப காவடி வரை! காவடியிலே இத்தனை வகைகளா? தெரிஞ்சிக்கோங்க!