விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையானூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


அமாவாசை தினம் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடப்படும். தை அமாவாசை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


தை அமாவாசை - சிறப்பு பேருந்து 


தை அமாவாசையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து 10 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து 5 பஸ்களும், ஆரணி, ஆற்காடு, திருப் பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 10 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.


மேலும் 11-ந் தேதியன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 10, 11-ந் தேதிகளில் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


முன்பதிவு 


எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.