நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றான தை அமாவாசை நாளை வருகிறது. இந்த நாட்களில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்களது ஆன்மா சாந்தி அடைவதோடு, நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை. 


தை அமாவாசை 2023:


ராமேஸ்வரம்:


ராமேஸ்வரத்தில் உள்ள கடற்கரை மற்றும் அக்னிதீர்த்தத்தில் ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் மக்கள் புனித நீராடுவர். இதையடுத்து தை அமாவாசையான நாளை புனித நீராடுவது மட்டுமின்றி, கடற்கரைகளில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வர். அதை தொடர்ந்து ராமேஸ்வரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் நவக்கிரகங்களுக்கான பூஜை வழிபாடுகளும் செய்வர். 


கன்னியாகுமரி:


கன்னியாகுமரி மற்றொரு தெய்வீகத் தலமாகும், இங்கு திரிவேணி சங்கமம் அல்லது மூன்று புனித கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல்நீரில் மூழ்கி புனித நீராடுவர். தொடர்ந்து, நீராடிய மக்கள் பலிகர்மா பூஜை, புரோகிதர்களால் ஓதப்படும் வேத மந்திரங்களை கொண்டு முன்னோர்கள் தர்ப்பணம் செய்வர். 


இந்த வேத மந்திரங்கள் முடிந்ததும், பொதுமக்கள் விநாயகர் மற்றும் பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று வழிப்படுவர். அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பூஜை துவங்கி அம்மனுக்கு வாசனை திரவிய சேவை, நைர்மால்ய பூஜை மற்றும் விஸ்வரூப தரிசனம் பக்தர்களுக்கு வழங்கப்படும். 


இரவு 8.30 மணிவரை உஷா பூஜை, ஸ்ரீ பலிபூஜை, உஷகலா தீபாரதி வரை அனைத்து சடங்குகளும் தடையின்றி நடக்கும்.


தை அமாவாசையும், சனி அமாவாசையும் ஒன்று சேருவது அரிதிலும் அரிது. இத்தகைய நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் நம் துக்கங்களிலிருந்து விடுபடுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என நம்பிக்கை. 


சனி தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்:



  • உளுந்து, உளுந்து, வெல்லம், வஸ்திரம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வதால் முன்னோர்களின் அருட்கொடைகள் கிடைக்கும்.

  • தானங்களில் சிறந்த தானம் அன்னதானம். தை அமாவாசை நாட்களில் அன்னதானம் வழங்குபவர்களுக்கு சக்திவாய்ந்த விளைவுகள் ஏற்படும்.

  • சனி தனது ஏழரை வருட காலத்தில் யாரையும் தண்டிக்க முடியும் என்பதால் சனியின் தீய பலன்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளுக்கு அனுமன் விடை அளிப்பார். எனவே இந்த நாளில் அனுமன் சாலிசா மற்றும் மந்திரத்தை ஓதினால் சனியின் தோஷங்களில் இருந்து விடுபடலாம்.

  • நாய்களுக்கு உணவளிப்பதால் சனியின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் மற்றும் உங்கள் பாதையில் இருந்து நீங்கிவிடுவார். 


நேரம்:


தை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் அளிப்பதற்கு காலை 6.17 மணி முதல் அன்று நள்ளிரவு அதாவது 22-ந் தேதி அதிகாலை 2.22 மணி வரை உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில்தான் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். நாம் இந்த தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடையவதாக நம்பப்படுகிறது.


முறை:


நீரில் இருந்தபடியே கரையில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. கரையில் இருந்தபடியே நீரில் தர்ப்பணம் கொடுக்க கூடாது. மேலும் கிழக்கு திசை பார்த்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.


அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். தர்ப்பணம் கொடுத்தபின் வழ்க்கம்போல் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடலாம்.


தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்வது மிகவும் நல்லதாகும். 


இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளிப்பதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 


தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு வந்து காலம் கடந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடகிழக்கு திசையில் வைத்து, தர்ப்பணம் கொடுத்தவர் தெற்கு பார்த்து நின்று சந்தனம், குங்குமம் இட்டு, துளசி மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின்னர் காலம் கடந்த முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவுவகைகளை இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும்.  அதன் பின்னர், கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்க்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தான் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்ய வேண்டும்.


செய்ய கூடாதவை:


அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் செய்யும் போது கறுப்பு எள்ளை மற்றவர்களிடம் இருந்து கடனாக வாங்கக்கூடாது. நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதேபோல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.


இதனையொட்டி, நாளையை தினம் தர்ப்பணம் அளிக்கும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்.