குழந்தை, தாய்மை, தந்தை போன்ற விசயங்கள் என்பது அனைவருக்கும் அவ்வளவு எளிதாக வாய்த்துவிடுவதிலை. அது பன்நெடுங்காலமாக இங்கு பெரும் போராட்டமாக பலருக்கும் இருந்து வந்துள்ளது. ஏன் நம்மில் பலர் தொடங்கி, நமது பெற்றோர்களோ அல்லது, நமது தாத்தா பாட்டிகளோ கூட தனது சிறு வயது குறித்து பேசுகையில் இப்போதும் சொல்லிக்கொள்வார்கள், நான் எங்கள் குல தெய்வ கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டதால் தான் எனக்கு உங்க அப்பன் பிறந்தான், அம்மா பிறந்தாள் என்பார்கள்.
இன்னும் ஒரு சில தம்பதியர், சாமிக்கு நான் இப்படியாக வேண்டினேன், அதனால் தான் நீ பிறந்தாய் என்பார்கள். நமது ஊரிலோ வகுப்பிலோ கூட ஒரு சிலர், நமக்கு கொஞ்சமும் அறிமுகமாகாத, ஏதோ ஒரு கடவுளின் பெயரை சூடிக்கொண்டவர்களாக இருப்பார்கள், காரணம், அந்த கோயிலுக்குச் சென்று எனக்கு குழந்தை பிறந்தால் உனது பெயரையே வைக்கிறேன் என அவர்களின் பெற்றோர் வேண்டியிருப்பர், அந்த பெயருக்கான காரணம் அப்படியாகத் தான் இருக்கும்.
நம் குழந்தை நம்மை அப்பா, அம்மா என எப்போது அழைக்கும் என்ற எண்ணம், ஏக்கம் பலருக்கும் இங்கு இருக்கிறது. அறிவியல் குழந்தைக்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்னதான் பல மருத்துவமனைகளை எதிர்கொண்டு மருத்துவர்களை அணுகி ஆலோசனைகள், சிகிச்சைகளைப் பெற்றாலும், மனதுக்கு ஒரு நம்பிக்கை, ஒரு பிடிப்பு, என்பது கோவிலுக்குச் செல்வதால் ஏற்படுகிறது என்றால் அதனை செய்து பார்ப்பதில் எந்த தவறும் இல்லை. கோயிலுக்கு வருபவர்கள் என்னதான் கெட்ட எண்ணங்களோடு தங்களின் வாழ்க்கையினை எடுத்துச் சென்றாலும், கோயிலுக்கு வரும்போது பெரும்பாலும் ஒரு நல்லெண்ணத்துடனே கோயிலுக்கு வருகிறார்கள். அப்படியான மனிதர்களை சந்திக்கையில், மனதுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுமாயின் அதனை முயன்று பார்க்கலாம்.
குழந்தைகள் இல்லாத தம்பதிகள் பலர் தங்களது பெற்றோர்களோ நண்பர்களோ, உறவுக்காரர்களோ சொல்லி ஒரு சில கோயில்களுக்குச் சென்று வந்த பின்னர் அவர்களுக்கு குழந்தைகள் பிறந்ததாக தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற கோயில்களைப் பற்றியும், வழிபாட்டு முறை பற்றியும் இந்த தொகுப்பில் காணலாம்.
கருவளர் நாயகி
திருமணமாகி பல வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாதவர்கள் பலரும், தஞ்சாவூரில், கருவளர்சேரி ர்னும் ஊரில் இருக்க கூடிய கருவளர் நாயகி அம்மன் ஆலையத்திற்கு வந்து வழிபட்டு சென்ற பின்னர் குழந்தை வரம் என்பதை பெற்றிருக்கிறார்கள் என பரவலாக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த ஆலையத்தில் அகிலாண்டேஸ்வரி மற்றும் அகதீஸ்வரர் குடி கொண்டுள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து அகிலாண்டேஸ்வரி அம்மனை வழிபடுபவர்களுக்கு, உடலில் உள்ள பிரச்சினைகள் நீங்கி, குழந்தை வரம் அகிலாண்டேஸ்வரி அம்மனால் வழங்கப்படும் என நம்பப்படுகிறது. இது தவிர, பிரசவத்தில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படாமல் இருக்க கர்ப்பமாக உள்ள பெண்களும் இங்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர். இவ்வாறு குழந்தை வரம் மற்றும் குழந்தை நலன் காக்கும் அம்மனாக விளங்கக்கூடிய இந்த அகிலாண்டேஸ்வரி அம்மனை, இங்குள்ள மக்கள், “கருவளர் நாயகி” என்று அழைத்து வருகின்றனர்.
குழந்தை வரம் வேண்டி இந்த அம்மனை வழிபடவரும் தம்பதியில், பெண் அம்மனை மனமுருகி வேண்டி, இங்கு குழந்தை வரம் வேண்டுவோர் செய்யும் படி பூஜை எனும் சிறப்பு பூஜையைச் செய்து வழிபடவேண்டும். அதன் பின்னர் அம்மனின் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கிழங்கினை உடலில் பூசி வந்தால், குழந்தை பெறுவதில் இருக்கிற தடைகளை நீங்கி, குழந்தை வரம் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். இவ்வாறு வழிபட்டு குழந்தை வரத்தினை பெற்றவர்கள், கர்ப்பமாக இருக்கும் போது, மீண்டும் வந்து அம்மனை தரிசித்துவிட்டு, நேர்த்திக் கடனாக தொட்டில், வளையல் போன்ற பொருட்களையும் சமர்பித்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். கும்பகோணம் செல்லு பாதையில் மருதநல்லூரில் இருந்து ஓரிரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கருவளர்சேரி ஆலையத்தில், காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கர்ப்பராட்சாம்பிகை அம்மன்
மேற்குறிப்பிட்ட கருவளர் நாயகியைப் போல், தஞ்சாவூரில் அமைந்துள்ள மற்றுமொரு குழந்தை வரம் அளிக்கும் அம்மனாக வீற்றிருப்பவள், கருகாக்கும் நாயகியான கர்ப்பராட்சாம்பிகை அம்மன். இந்த அம்மனுக்கு கரும்பணையாள் என்று மற்றொரு அருட்பெயரும் உண்டு. கரும்பின் சுவை போல் இனிமையான குழந்தை வரத்தினை வழங்குவதால், இந்த அம்மனுக்கு கரும்பணையாள் எனும் அருட்பெயர் இருப்பதாகவும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். இந்த கோவிலுக்கு வரும் தம்பதிகளில், பெண்கள், சுத்தமான பசு நெய்யினால், அம்மனின் ஆலையத்தில் உள்ள படிகளை பக்தியோடு வேண்டி, மொழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இந்த வழிபாடானது அனைத்து நாட்களிலும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அம்மனின் சந்நிதியில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யினை ஒரு மண்டலம் அதாவதும் 48 நாட்கள் உண்டு வர குழந்தை வரத்தினை கர்ப்பராட்சாம்பிகை வழங்குவாள் என இங்கு வந்து வழிபடுவோர் நம்பிக்கை கொண்டுள்ளனர். கருவுற்ற பெண்கள் ஆலையத்தில் பூசிக்கப்பட்ட விளகெண்ணையினை வாங்கிச் சென்று உடலில் பூசி வருவதால் சுகப்பிரசவம் நடக்கும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த ஆலயத்திற்கு வந்து, குழந்தை வரம் பெற்று குழந்தையினை பெற்றெடுத்த தாய்மார்கள், தொட்டில் கட்டி துலாபாரம் செய்தும் வழிபடுகின்றனர். கர்ப்பராட்சாம்பிகை அம்மன் ஆலயம் கும்பகோணத்தில் இருந்து, சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருக்கருகாவூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புட்லூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்
குழந்தை வரம் அளிக்கும் தெய்வங்களில் அடுத்ததாக நாம் பார்க்கவிருப்பது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிறிய ஊர் புட்லூர். இந்த ஊரின் நடுவே அமைந்துள்ள ஆலயம் தான் அங்காள பரமேஸ்வரி ஆலயம். இந்த ஆலயம் பார்ப்பதற்கு வித்தியாசமாக காணப்படுகிறது. இங்கு பெரிய உருவத்தில் குடி கொண்டிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன், வயிற்றில் கருவோடு, படுத்திருக்கிறாள். இதற்கு காரணமக உள்ளூர் வாசிகள் ஒரு காரணக்கதையினை சொல்லி வருகின்றனர். குழந்தை வரம் கேட்டு வரும் தம்பதிகளுக்கு, தாய்மைக் கோலத்தில் உள்ள இந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் மனமுருகி பக்தியோடு வேண்டுபவர்களுக்கு குழந்தை வரம் அளிப்பவளாக இருக்கிறாள் என திருவள்ளூர் பகுதியில் பரவால நம்பப்படுகிறது. இந்த ஆலயத்தின் தலவிருட்சமாக இருப்பது வேப்பமரம். அதில் குழந்தை வரம் வேண்டுவோர், தொட்டில் கட்டி எலுமிச்சை பழம் வைத்து வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இதேபோல், சென்னை அண்ணா நகரில் இருந்து முகப்பேரு செல்லும் வழியில் அமைந்துள்ள கோவில், ஸ்ரீசந்தான சீனிவாச பெருமாள் கோவில். இங்கு உள்ள சந்தான சீனிவாச பெருமாளை குழந்தை பாக்கியம் வேண்டும் தம்பதிகள், இங்கு விஷேசமாக நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு வழிபடவேண்டும். அப்போது பெண்கள் சந்தான சீனிவாச பெருமாளை மடியில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்துவிட்டு தம்பதிகள் இருவர் பெயரிலும், அர்ச்சனை செய்ய வேண்டும் இவ்வாறு செய்வதால் குழந்தையாக அந்த சந்தான சீனிவாச பெருமாளே வந்து பிறப்பார் என நம்பப்படுகிறது.
குழந்தை வரம் வேண்டி கோவிலுக்குச் செல்ல விரும்புபவர்கள் மேல்குறிப்பிட்ட கோவில்களுக்குச் சென்று வழிபடலாம். மேலும் தமிழகம் முழுவதும் குழந்தை வரம் அளைக்கும் தெய்வங்கள் குறித்தும் வழிபாட்டு முறை குறித்தும், அடுத்த கட்டுரையிலும் பார்க்கலாம்.