தருமபுரி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக 300க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரிகளை எடுத்துச் சென்றனர். 

 

தருமபுரி மாவட்டம் பெரிய குரும்பட்டி, மாதுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து புதிதாக ஸ்ரீ காளியம்மன் கோயிலை பிரம்மாண்டமாக கட்டியுள்ளனர். இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட காளியம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவிற்காக இரண்டு கிராமத்தில் உள்ள ஏராளமான மக்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கடந்த சில நாட்களாக விரதம் இருந்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்த கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாயபெருமாள், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீதுவார சக்தி ஆகிய தெய்வங்களின் நூதன ஆலய பிம்ப அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி ஸ்ரீகணபதி பூஜையுடன் துவங்கியது.  இன்று கிராமத்தில் உள்ள பெண்கள் 300க்கும் மேற்பட்டோர், கோபுர கலசத்திற்கு ஊற்ற தீர்த்த குடம், முளைப்பாரியை ஊர்வலமாக, வானவேடிக்கையுடன், மேல தாளங்கள் முழங்க கோயிலுக்கு சென்றனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக கிராம மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த தீர்த்தங்களை கோயிலில் ஊற்றி முளைப்பாரிகளை வைத்து சிறப்பு பூஜை செய்தனர். மேலும் புதிய சிலைகள் கரிக்கோலம் வருதலும், தீர்த்த குடம், முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. பின் புதிய சுவாமிகள் ஊர்வலமும் நடந்தது.  25ம் தேதி முதல் கால யாகபூஜையும், பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடக்கிறது. இதனை தொடர்ந்து வரும் 27ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 8 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.



 

இந்த நிகழ்ச்சியில் இரண்டு கிராமங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர். அப்பொழுது ஒவ்வொரு சில பெண்கள் ஆண்களுக்கு சாமி வந்து ஆடினார் அப்பொழுது அருள்வாக்கும் கூறினர். இதில் கோயிலை சிறப்பாக கட்டி திருவிழா எடுக்கின்ற மக்களை பாதுகாப்பேன் என்றும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் பக்தர் ஒருவர் அருள் வாக்கு தெரிவித்தார். மேலும் கோயில் அருகில் 2000 மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.