Telangana Srirangam: தெலங்கானாவில் உள்ள இந்த பிரசித்தி பெற்ற கோயில் உத்தர ஸ்ரீரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
தெலங்கானா ஸ்ரீரங்கம்:
தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயில் வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான புனிதத் தலமாகும். இது திருச்சியை ஒட்டி காவேரி நதி மற்றும் அதன் துணையாறான கொள்ளிடம் ஆகிய இரண்டு நதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது. வைணவ திவ்ய ஸ்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் இந்தக் கோயில், இந்தியாவின் மிகப்பெரிய கோயில் வளாகங்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்துக்கள் தங்கள் வாழ்நாளில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஒரு மகிமையான இடமாக கருதப்படுகிறது. இருப்பினும், தெலங்கானா மாநிலத்தில் இந்தக் கோயிலைப் போன்ற மற்றொரு கோயில் உள்ளது. தெலுங்கு மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் அணுகக்கூடிய வனபர்த்தி மாவட்டம், பெப்பேரு மண்டலம், ஸ்ரீரங்கபுரில் உள்ள பானுகந்தி ஆற்றின் கரையில் ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயில் எனும் வரலாற்று சிறப்பு புன்னியஸ்தலம் அமைந்துள்ளது.
கோயில் வரலாறு
ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் தெலங்கானாவில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும். இந்த கோயில் 18 ஆம் நூற்றாண்டில் வனபர்த்தி வம்ச மன்னர்களால் கட்டப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் கோயிலை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, “ஒரு முறை, தெற்கே யாத்திரை சென்ற ராஜா பஹிரி கோபால ராவ், ஸ்ரீரங்கத்திற்கு வந்திருந்தார். அங்கு ரங்கநாதரை தரிசனம் செய்த பிறகு, அவர் வைணவ மதத்தைத் தழுவினார். யாத்திரை முடிந்து திரும்பிய பிறகு, ஒரு இரவு ரங்கநாதர் தனது கனவில் தோன்றி, தான் 'கனயபள்ளி' கிராமத்தில் இருப்பதாகவும், அதைக் கொண்டு வந்து நிறுவ வேண்டும் என்றும் கூறினார். எனவே, பஹிரி கோபால ராவ் கனவில் குறிப்பிடப்பட்ட இடத்திற்குச் சென்று, அங்குள்ள சிலையை கோரிவிபாடு கிராமத்திற்கு கொண்டு வந்து அங்கு ஒரு கோயிலைக் கட்டினார். அப்போதிருந்து, கோரிவிபாடு என்ற பெயர் ஸ்ரீ ரங்கபுர் என்று மாறிவிட்டது. பின்னர், ராஜா ராமேஸ்வர ராவ் கோயிலைச் சுற்றி ஸ்ரீரங்க சமுத்திரம் என்ற பெரிய குளத்தைத் தோண்டினார். அவர் ஒரு லட்சுமி கோயிலையும் கட்டினார்” என ஸ்தலபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரங்கநாதசுவாமி கோயிலின் சிறப்புகள்
ரங்கநாதர் சயன மூர்த்தி வடிவில் வழிபடப்படும் இந்தக் கோயிலில், பழங்கால தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் அடித்தளங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரம்மோற்சவங்கள் மற்றும் கோத-ரங்கநாத சுவாமி கல்யாணம் இங்கு வருடத்திற்கு மூன்று முறை (சங்கராந்தி, உகாதி, ஷ்ரவணமாசம்) கொண்டாடப்படுகின்றன. தெலுங்கு மாநிலங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ரங்கநாதரைத் தரிசிக்க வருகிறார்கள். இந்தக் கோயிலில் உள்ள சிற்பங்கள் பக்தர்களை கவர்கின்றன.
திருமணங்களுக்குப் பிரபலமானது
ஸ்ரீ ரங்கபுரில் பானுகந்தி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயில் திருமணங்களுக்குப் பிரபலமானது. இங்கு ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்டால், அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இதற்கிடையில், திரையுலகைச் சேர்ந்த சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஹைதாரியும் இங்கு தான் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரங்கநாதசுவாமி கோயிலுக்கு பயணிப்பது எப்படி?
ஸ்ரீ ரங்கபுர் ஐதராபாத்திலிருந்து 160 கி.மீ., வனபர்த்தியிலிருந்து 25 கி.மீ. மற்றும் பெப்பேரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கட்வால் ரயில் நிலையம் இங்கிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. நீங்கள் ரயிலில் செல்ல விரும்பினால், கட்வால் சென்று அங்கிருந்து சாலை வழியாக செல்லலாம். ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கு, ஸ்ரீ ரங்கபுர் ஒரு நல்ல மாற்று தேர்வாக இருக்கும்