108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. மூலவர் அரங்கநாத பெருமான் தவிர, கோயில் வளாகத்தில் வேறு பல சன்னதிகளோடு ஏறக்குறைய 53 உப சன்னதிகளும் உள்ளது. ஸ்ரீரங்கத்தில் ஓடும் காவிரி ஆற்றுக்கு நடுவே இருக்கும் தீவு அரங்கத்தில் இறைவன் கோவில் கொண்டுள்ளதால் “திருவரங்கம்” என இத்தலம் அழைக்கப்படுகிறது. இக்கோவிலின் இறைவனாகிய பெருமாள் ரங்கநாயகர் எனவும் தாயார் ரங்கநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள். மேலும் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. அவை, நாழிகேட்டான் கோபுரம், ஆர்யபடால் கோபுரம், கார்த்திகை கோபுரம், தெற்கு கட்டை, கோபுரம்-I, தெற்கு கட்டை கோபுரம்-II, ராஜகோபுரம் இக்கோவிலின் முக்கிய சிறப்பாகும்.




வரலாறு:


புராணங்களின் படி ராவணன் வதத்திற்கு பின்பு அயோத்தியின் மன்னனாக ஸ்ரீராமர் முடிசூடும் விழாவிற்கு வருகை தந்த விபீஷணனுக்கு, ஸ்ரீ நாராயணனின் சிறிய சிலையை ராமர் பரிசளித்தார். அதை பெற்றுக்கொண்டு இலங்கைக்கு திரும்பும் வழியில் இறைவழிபாடு செய்ய விரும்பிய விபீஷணன், இடையன் உருவிலிருந்த விநாயகரிடம் நாராயணனனின் சிலையை கொடுத்து, அதை எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக்கூடாது என கூறி காவிரி நதி தீரத்திற்கு சென்றான் விபீஷணன். விபீஷணன் வருவதற்கு நேரம் ஆகியதால் அச்சிலையை கீழே வைத்து சென்று விட்டார் விநாயக பெருமான். பிறகு வந்த விபீஷணன் நாராயணனின் சிலை கீழே வைக்கப்பட்டிருப்பதை அறிந்து, அதை அகற்றுவதற்கு முயற்சித்தான். அப்போது நாராயணன் அசரீரியாக தான் இங்கேயே இருக்க விரும்புவதாக விபீஷணனிடம் கூறினார். ஆனால் விபீஷணனுக்கு வாக்களித்தது போலவே அவனது இலங்கை நாடு இருக்கும் தெற்கு திசையை பார்த்தவாறே தான் வீற்றிருப்பதாகவும் கூறினார்.




மேலும் இப்பகுதியை ஆண்ட “தர்ம வர்ம சோழன்” ரங்கத்தாருக்கு ஆலயம் எழுப்பினான். சில காலங்களில் அது காவிரி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆற்றுமணலில் முற்றிலும் புதைந்து போனது. பின்னாளில் ஆட்சிக்கு வந்த சோழ மன்னன் ஒருவன், ரங்கநாதரின் கோவில் எங்கிருக்கிறது என்பதை தினந்தோறும் ஆற்றுப்பகுதிக்கு வந்து தேடலானான். அப்படி ஒரு முறை இங்கு வந்த போது ரங்கநாதர் ஆலயம் மணலில் புதைந்து போவதற்கு முன்பு ரங்கநாதருக்கு செய்யப்படும் பூஜையின் போது வேதியர்கள் ஓதிய மந்திரங்களை, அக்கோவில் வளாகத்திலிருந்த மரத்தில் வசித்த கிளி ஒன்று நன்கு கவனித்தபடியால் அம்மந்திரங்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து கொண்டிருந்தது. இதை வைத்து புதைந்த கோவில் இருக்கும் இடத்தை அந்த மன்னன் கண்டுபிடித்து மீண்டும் சீரமைத்து கட்டியதால் “கிளிச்சோழன்” என அந்த சோழ மன்னன் அழைக்கப்பட்டான். 




சிறப்புகள்


5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. “சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சளர்கள், விஜயநகர பேரரசர்கள்” என பல அரச வம்சம்களால் இக்கோவில் சீர்செய்யபட்டு கட்டப்பட்டுள்ளது. 14 ஆம் நூற்றாண்டில் டில்லி சுல்தான்களால் இந்த ரங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டது. பரப்பளவில் இந்திய அளவில் மிகப்பெரிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.  இந்திய கோயில்களிலேயே மிக உயரமானதாக இருக்கும் இக்கோவிலின் கோபுரம் 1987 ஆம் ஆண்டு அனைவரின் முயற்சியாலும் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவிலில் தான் திருவில்லிபபுத்தூரில் பிறந்து “கோதை” என்றழைக்கப்பட்ட அழ்வார்களில் ஒரே பெண்ணான “ஆண்டாள்” அரங்கனுள் ஐக்கியமானாள். இந்த கோவிலில் ஸ்ரீ ராமானுஜரது திருவுடல் 900 ஆண்டுகளுக்கும் மேலாக பச்சை கற்பூரம் சாற்றி பாதுகாக்கப்படுகிறது. இங்கு கம்பராமாயண மண்டபம் இருக்கிறது. இங்கு தான் “கவிச்சக்ரவத்தி கம்பன்” தன் “கம்பராமாயணத்தை” அரங்கேற்றம் செய்து அந்த” நரசிம்ம மூர்த்தியாலேயே” பாராட்டப்பெற்றார்.


இந்த கோவிலின் இறைவனான ரங்கன் மீது தீவிர பக்தி கொண்ட டில்லி சுல்தானின் மகள் இக்கோவிலுக்கு வந்து ரங்கனை தரிசித்த போது, அங்கேயே தன் உடலை நீத்து ரங்கனில் ஐக்கியமானாள். எனவே அவள் “துலுக்க நாச்சியார்” என அழைக்கப்பட்டு வழிபடப்படுகிறாள். இந்த கோவிலின் இறைவனான ஸ்ரீ ரங்கநாதர் ஸ்ரீதேவியாகிய லட்சுமி மற்றும் ஆண்டாளுடன் காட்சியளிக்கிறார்.




மேலும் நவகிரகங்களில் “சுக்கிரனின்” அம்சம் பொருந்தியவராக இவர் கருதப்படுவதால் “சுக்கிரன் பரிகார தலமாகவும்” இக்கோவில் விளங்குகிறது. இங்கிருக்கும் “சக்ரத்தாழ்வார்” சந்நிதியில் வழிபட்டால் நம்மை அண்டி இருக்கும் துஷ்ட சக்திகள், துரதிர்ஷ்டங்கள் மற்றும் நோய் நொடிகள் நீங்குவதாக கூறப்படுகிறது. மார்கழியில் வரும் “வைகுண்ட ஏகாதசி” தினத்தில் இக்கோவிலில் “சொர்க்க வாசல்” திறந்து, அதில் பங்கேற்று வழிபட பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது சிறப்பு அம்சமாகும். இங்கு நடைபெறும் “பகல் பத்து, ராப்பத்து” விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மிக சிறந்த சிற்பங்களை கொண்ட இக்கோவில் ஐ .நா. சபையின் “யுனெஸ்கோ” அமைப்பால், பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவம் கொண்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நம்பெருமாள் கோவிலில் ஏழு ஆச்சாரியார்களுக்கு தனி சன்னிதி அமைந்துள்ளது. அவை, ராமானுஜர், பிள்ளை லோகாச்சாரியார், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான், வேதாந்த தேசிகர், நாதமுனி.




 


பெரியவாச்சான் பிள்ளை:


ஸ்ரீரங்கம் ஆலயத்தில் உள்ள தாயார் சன்னிதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். அவை கோடை உற்சவம், வசந்த உற்சவம் ஜேஷ்டாபிஷேகம் நவராத்திரி ஊஞ்சல் உற்சவம் அத்யயன உற்சவம்


தங்க குதிரை பவனி :


ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டும், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். அந்த விழாக்கள்., விருப்பன் திருநாள், வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் பாரிவேட்டை , ஆதி பிரம்மோற்சவம். சந்திர புஷ்கரணியில் ஆறு முறை, கொள்ளிடத்தில் ஒருமுறை என மொத்தம் ஏழு முறை, ஸ்ரீரங்கப் பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். விருப்பன் திருநாள்-சித்திரை, வசந்த உற்சவம்-வைகாசி, பவித்ரோற்சவம்-ஆவணி, ஊஞ்சல் உற்சவம்- ஐப்பசி, அத்யயன உற்சவம்-மார்கழி, பூபதி திருநாள்-தை, பிரமோற்சவம்-பங்குனி நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டுமே, திருக்கோவிலை, விட்டு வெளியே எழுந்தருளுவார். சித்திரை, வைகாசி , ஆடி, புரட்டாசி, தை ,மாசி, பங்குனி ரங்கநாத பெருமாளுக்கு 7 நாச்சியார்கள் இருக்கிறார்கள்., ஸ்ரீதேவி பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ரெங்கநாச்சியார்.