புரட்டாசி மாதம்.. பெருமாள் வழிபாடு அதிகமாகும் இந்த வேளையில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், வெண்ணைமலை ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் அதிகாலையில் நடைபெற்றது.
புரட்டாசி மாதம் செப்டம்பர் 18 ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய நிலையில், முதல் சனிக்கிழமை முதல் ஆன்மீக பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். புரட்டாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆலயத்தை சுற்றியுள்ள யாதவர் விஷ்வகர்மா சமுதாய மண்டபங்களில் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் வழங்கப்பட்டது. அதேபோல் சுமார் 100க்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தினர்.
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டி உளுந்து, பயிறு வகைகள் நவதானியம், நெல், அரிசி மற்றும் உணவு தானியங்களை பொதுமக்களுக்கும் தர்மமாக வழங்கினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் அதிக அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக தீயணைப்பு வாகனமும் நிறுத்தப்பட்டுள்ளது.
வெண்ணைமலை:
கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அருகில் ஆத்ம நேச ஆஞ்சநேயர் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி முன்னிட்டு ஹனுமன் மூலிகைகள், மலர் மாலைகள் படைத்து சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காண்பித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
பக்தர்கள் நினைத்த காரியம் வெற்றி அடைய சிறப்பு பிரார்த்தனையும், கட்டு மந்திரமும், அபிஷேக வழிபாடும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அனுமன் அருள்பெற்று சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் ஜெயராம் மற்றும் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.
கடவூர் அருகே வாயுபுத்திர ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசியை ஒட்டி வெண்ணையால் அலங்காரம் செய்யப்பட்டு சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இந்தக் கோவிலில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பூஜையும், சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நாட்களான அமாவாசை, பௌர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் பலரும் வணங்கி வருகின்றனர். இக்கோவிலில் புரட்டாசியை ஒட்டி பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆஞ்சநேயருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம், வெற்றிலை, துளசி ஆகிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது.