மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்துள்ளது மேல மங்கைநல்லூரில் அமைந்துள்ளது மிகவும் பழைமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ மன்மதேஸ்வரர், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ நந்திகேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் மிக சீரும், சிறப்புமாக நேற்று  நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை யொட்டி யாகசாலைகள் அமைத்து, புனித நீர்கடங்களை வைத்து வேதவிற்பன்னர்கள் நான்கு கால யாகசாலை பூஜைகள் செய்து வந்தனர்.




தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று மகா பூர்னாகுதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்களை வேத விற்பன்னர்கள் தலையில் சுமந்து, மேள தாளம் வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் கோயில் கோபுர கலசங்களை அடைத்து வேத மந்திரம் முழங்க புனிதநீரை கோபுர கலசங்களில் ஊற்றி, மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டு இருந்தனர்.


நல்லாடை பரணி நட்சத்திர ஆலயமான, சுந்தர நாயகி சமேத அக்னீஸ்வரர் கோயில், கும்பாபிஷேக விழாவில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா நல்லாடை கிராமத்தில் பழமை வாய்ந்த சுந்தர நாயகி சமேத அக்னிஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மார்க்கண்டேயனை பெறுவதற்காக குழந்தை வரம் வேண்டி மிருகண்ட மகரிஷி யாகம் செய்த ஆலயமாகவும், பார்வதியின் சாபத்தால் ஒளியை இழந்த அக்ணி பகவான் இறைவனின் வரத்தால் இத்தலத்தின் தெற்கே இருக்கும் தீர்த்தத்தில் நீராடி இழந்த ஒளியை பெற்றதாக வரலாறு கூறுகிறது. 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழவள நாட்டை ஆட்சி செய்த இரண்டாம் ராஜராஜ சோழன் இவ்வாயத்தை கருங்கல் ஆலயமாக புதுப்பித்தார்.




இதுகுறித்த கல்வெட்டுகள் ஆலயத்தின் கருவறை சுவர்களில் காணப்படுகிறது. பரணி நட்சத்திரக்காரர்களின் பரிகார ஆலயமாக விளங்கும் இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாகசாலைகள் அமைக்கப்பட்டு, ஆறு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று  யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை மேளத் தாள  மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, கோவில் விமானத்தை அடைத்தனர். தொடர்ந்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி உற்சவத்தில் ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலயமானது அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் வைகாசி பெருவிழா கடந்த 17-ஆம் தேதி பூச்சொரிதல் உடன் தொடங்கியது. பின்னர் சுவாமி வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. இதனிடையே விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.




காவிரிக் கரையில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர் கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 16 அடி நீளம் அலகு குத்தியும் , சக்தி கரகம் எடுத்தும் பக்தர்கள் தீ மிதித்த காட்சி காண்போரை பரவசம் அடையச் செய்தது. தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.