2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி நேற்று கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை பிரதோஷ தினத்தில் மகா சிவராத்திரி சேர்ந்து வந்தது கூடுதல் சிறப்பு. மகா சிவராத்திரி என்றாலே சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு முழுவதும் 4 கால பூஜை நடத்தப்படும். அதில் முதல் கால பூஜை என்பது பிரம்மா – சரஸ்வதி சிவபெருமானுக்கு செய்யும் பூஜை, இரண்டாம் கால பூஜை என்பது மகா விஷ்ணு – மகா லட்சுமி சிவபெருமானுக்கு செய்யும் பூஜை, மூன்றாம் கால பூஜை என்பது பார்வது தேவி சிவபெருமானுக்கு செய்யும் பூஜை, நான்காம் கால பூஜை என்பது தேவர்கள் மனிதர்கள் – சிவபெருமானுக்கு செய்யும் பூஜை. இவ்வாறு புராணங்களில் கூறப்படுகிறது.
இப்படி இரவு முழுவது சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் உடன் பூஜைகள் நடைபெறும். இந்த பூஜைகளை நேரில் கண்டு சாமி தரிசனம் செய்ய இரவு முழுவதும் சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தனர். கோயில்களில் பக்தர்கள் எந்த சிரமமுமின்றி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், மருந்தீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வேங்கீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்தனர். அந்த வகையில் திருவள்ளூரில் இருக்கும் ஸ்ரீ பொம்மியம்மள் சமேத முக்தீஸ்வரர் ஆலயத்தில் 41 அடி உயர சிவலிங்கத்திற்கு கிரேன் மூலம் பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
அதேபோல் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள முதன்மை ஸ்தலமான ஏகாம்பரநாதர் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோயிலில் இருக்கும் அனைத்து சிவ லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இரவு முழுவதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மகா சிவராத்திரியை முன்னிட்டு, பெருவுடையார், பெருயநாயகி அம்மனுக்கு நான்கு கால பூஜை, அதிகாலை அர்த்தஜாம பூஜைகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பெரிய கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
அதேபோல் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷாவில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் கலந்துக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய துணை ஜனாதிபதி, “ கோவை ஈஷா யோகா மையத்தில் நடத்தப்படும் மகா சிவராத்திரி விழா உலகம் முழுவதும் உள்ள நவீன கால இளைஞர்களை ஈர்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்தப்படுவது பாராட்டுகுறியது. இந்நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொள்வது வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். மதம், மொழி என அனைத்தையும் கடந்து கொண்டாடப்படும் நிகழ்வாக மகா சிவராத்திரி உள்ளது” என தெரிவித்துள்ளார். பல திரையுலக பிரபலங்களும் சிவராத்திரி பூஜையில் கலந்துக்கொண்டனர்.
இதனை தவிர்த்து ஆயிரக்கணக்கான பக்தர்கல் வெள்ளயங்கிரி மற்றும் சதுரகிரியில் அமைந்துள்ள கோயிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தனர். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களிலும் விடிய விடிய தேவாரம் மற்றும் சிவபெருமானுக்கான பாடல்கள் பாடி பக்தி பரவசத்தில் மூழ்கி மனமுருகி சாமி தரிசனம் செய்தனர்.