செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது.கந்தபுராணக் கூற்றுப்படி, முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்க்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்போரூர் கந்தசாமி கோயில்
இத்திருத்தலத்திலேயே முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக நம்பப்படுகிறது. திருக்கோவில் வரலாற்றுப்படி, முருகப்பெருமான் மதுரை மாநகரிலிருந்த, சிதம்பரம் அடிகளாரின் கனவில் தோன்றியதாகவும், தான் திருப்போரிலுள்ள பனை மரத்தினடியில், கேட்பாரற்று இருப்பதாக கூறி மறைந்ததாகவும், கடவுள் உரைத்தபடியே சிதம்பரம் அடிகளார் திருப்போரூர் வந்தடைந்தார். முருகப்பெருமானின் சிலையை மீட்டெடுத்து, திருக்கோவில் அமைத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது.
திருப்போரூர் சூரசம்ஹாரம்
இதனைத் தொடர்ந்து இன்று சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. சஷ்டியின் ஆறாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் 108 முறை கோயிலை வலம் வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து திருப்போரூர் கிழக்கு மாடவீதி வரை விரட்டி சென்று, கெஜமுகன், பானுகோபன், அஜமுகி, தாருகன், சிங்கமுகன் ஆகியோரை, வீரபாகு வேடமணிந்த சிறுவர்கள் வதம் செய்தனர். வீதியில் எழுந்தருளிய முருகப்பெருமான், சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சூரசம்ஹாரம் என்றால் என்ன ?
புராண காலத்தில் சூரபத்மன் அசுரன் வாழ்ந்து வந்தான். சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் சிவபெருமானிடம் சூரபத்மன், சாகாவரம் வேண்டும் என கேட்க அதற்கு சிவபெருமான் அப்படி ஒரு வரத்தை கொடுக்க முடியாது என கூறவே, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும் என கேட்க சிவபெருமானும் அவ்வாறே அருளி விட்டு செல்கிறார்.
சூரபத்மன் கிடைத்த வரத்தை வைத்து மக்களுக்கு நல்லது செய்யாமல், தேவர்களை அடிமைப்படுத்தி நடத்தி வந்தான்.இந்திரன் முதல் அனைத்து தேவர்களையும் சிறை பிடித்து சூரபத்மன் வெற்றி கொண்டான். வேறு வழி இல்லாமல் அனைத்து தேவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர்.
உடன்பிறகு சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணில் இருந்து, தீப்பொறிகள் மூலம் ஆறு குழந்தைகளை உருவாக்கினார். ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் கொண்டவாறு வளர்த்தெடுத்தனர். உடன்பிறகு ஆறு குழந்தைகளும் ஒரே ரூபமாக பார்வதி உதவியுடன் மாற்றப்பட்டு ஆறுமுகனாக அனைவருக்கும் காட்சி தந்தார்.
அதன்படி தனது தாயார் பார்வதியின் அறிவுரையின்படி சூரபத்மனை போரில் விழுத்தி தேவர்களை விடுவிக்க முருகப்பெருமாள் முடிவு செய்தார். தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் தேவர்களை விடுவிக்க போவதில்லை போரை சந்திக்க தயார் என சூரபதமன் சூலூரைத்தார். இதன் பிறகு 6 நாட்கள் கடுமையாக போராடிகள் நடைபெறுகிறது.
ஆறு நாட்கள் நடைபெற்ற சூரசம்ஹாரத்தின் முடிவில் முருகன் மாமரமாக நின்ற சூரனை தன் சக்தியாகிய வேலினால் பிளந்தார். பிளவுபட்ட மாமரம் சேவலும் மயிலுமாக மாறவும், சேவலை கொடியாகவும் மயிலை வாகனமாகவும் முருகன் ஏற்றுக்கொண்டார். இன்றும் ஆண்டுதோறும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் இதுதான் நடைபெற்று வருகிறது.