காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அம்மன், சோமாஸ்கந்தர் சிலைகள், கும்பகோணத்தில் இருந்து காஞ்சிபுரம் நீதிமன்றம் வாயிலாக, வழக்கு முடியும் வரை சிலைகளை பாதுகாக்கும் படி திருக்கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.


பஞ்ச பூத ஸ்தலங்கள்


சைவ கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமானுக்கு பஞ்ச பூத ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக இருந்து வருகிறது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல், காளகஸ்தி ஆகிய 5 தலங்கள் பஞ்சபூத ஸ்தலங்களாக கருதப்படுகிறது. 


பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அம்மன் சிலைகள் பல ஆண்டுகள் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில், அதில் சிறிது சிதலம் அடைந்தது எனக் கூறி புதிய சிலை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. 


நீதிமன்றத்தில் வழக்கு


இதற்காக பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளும், தங்கங்களும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிலை செய்த செயலில் உரிய தங்கம் சேர்க்காமல் மோசடியில் ஈடுபட்டதாக கூறி, மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 


இந்நிலையில் முறைகேடு எனக் கூறப்பட்ட சிலைகள் கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலரிடம் பாதுகாப்பாக இருந்தது. தற்போது இந்த வழக்கு காஞ்சி நீதிமன்றத்திலேயே, செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் கும்பகோணத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த சோமாஸ்கந்தர் சிலை மற்றும் அம்மன் சிலைகள் கும்பகோணம் நீதிமன்ற வாயிலாக காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.


காஞ்சிபுரம் வந்தடைந்த சிலைகள்


அதன் பின் காஞ்சிபுரம் நீதிமன்ற ஊழியர்கள் இந்த இரு சிலைகளை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்க நீதிபதி அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் காவல்துறை பாதுகாப்புடன் நீதிமன்ற ஊழியர்கள் ஏகாம்பரநாதர் திருக்கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தனர். 


அதனைத் தொடர்ந்து செயல் அலுவலர்கள் சிலைகளின் நீளம், அகலம் மற்றும் எடை உயரம் உள்ளிட்டவைகளை பல்வேறு நிலைகளில் அளவிட்டு குறிப்பெடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் நீதிமன்றம் அளித்த அளவுகளை சரிபார்த்து உறுதி செய்து கொண்டனர். அதன் பின் அவ்வளாகத்தில் உள்ள திருமேனி பாதுகாப்பு அறையில் இரு சிலைகளும் வைக்கப்பட்டது. தற்போது சிலைகள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டாலும் பொதுமக்கள் பார்வையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.