“சனியை போல் கெடுப்பாரும் இல்லை; சனியை போல் கொடுப்பாரும் இல்லை" என்பார்கள். ஒரு மனிதனின் வாழ்நாளில் 2 முதல் 3 முறை சனி பகவான் ஏழறை ஆண்டுகள் பிடித்துக் கொண்டு, வாழ்க்கை பற்றிய புரிதலை, பக்குவத்தை தரக் கூடியவர். ஏழறை ஆண்டுகள் எந்த அளவிற்கு கஷ்டத்தை கொடுக்கிறாரோ அதே அளவிற்கு, சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போது நலன்களை அள்ளிக் கொடுப்பார் என்பார்கள்.
இவ்வாறு சனிபகவானுக்கு உரிய பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருநள்ளாறு திருத்தலம். இந்த திருத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். மூலவர் தர்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தின் மீது முளைத்த தழும்புகள் உள்ளது. இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்தில் நந்தியும் பலிபீடமும் சுவாமிக்கு எதிரே இல்லாமல் சற்று ஒதுங்கி இருப்பதை காணமுடியும். மேலும் இத்தலம் சோழர்களால் கட்டப்பட்ட சிவன் கோயில்களில் ஒன்று. மேலும் இத்தலம் சிவன் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 114 வது சிவத்தலமாக அமைத்துள்ளது.
சனிப்பெயர்ச்சி மற்றும் விசேஷ காலங்களில் சனிபகவான் தங்க காக வாகனத்தில் தங்க கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். சனீஸ்வரனனை கண்டாலே எல்லாரும் ஓட்டம் பிடிக்கும் நிலைமையில் இருந்து, இங்கே தங்க கவசம் அணிந்த சனீஸ்வர பகவானை காண்பதற்கு அன்று கூட்டம் அலைமோதும்.
இவ்வாறு சிறப்புமிக்க கோயிலில் சனி பெயர்ச்சி விழா இன்று நடைபெறுகிறது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாலை 5:20 மணிக்கு இடம்பெறுகிறார். இந்த சனி பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் இன்று தரிசனம் செய்வதற்காக இரு புறங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு மேலும் பக்தர்கள் வசதிக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல சிறப்பு பேருந்துகள் மருத்துவ முகாம் கழிப்பறை வசதிகள் போன்றவைகள் அமைக்கப்பட்டுள்ளது.