2023 ஆம் ஆண்டுக்கான சனிப்பெயர்ச்சி நிகழ்வு இன்று நடக்கும் நிலையில், இந்த நாளில் திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள் என்ன செய்யலாம் என்பதை காணலாம். 


சனிப்பெயர்ச்சி:


நவகிரகங்களில் அவரவர்களின் கர்ம வினைக்கு ஏற்ப சுப மற்றும் அசுப பலன்களை அளிக்கக்கூடிய கிரகம் சனி ஆகும். பொதுவாக சனி கொடுப்பதையும், கெடுப்பதையும் யாராலும் தடுக்க முடியாது. இந்த சனிப்பெயர்ச்சியானது ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர எடுத்துக் கொள்ளும் கால அளவு இரண்டரை வருடம் ஆகும். அந்த வகையில் இன்று  மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனி பகவான் பிரவேசிக்க உள்ளார். 


இந்த சனிப்பெயர்ச்சியானது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெறும். சனிப்பெயர்ச்சியானது நடைபெறும்போது சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள், அஷ்டோத்திர அர்ச்சனை, சகஸ்கர நாம அர்ச்சனை, தீப வழிபாடு ஆகியவை நடைபெறுகிறது. 


திருநள்ளாறுக்கு போக முடியாதவர்கள் என்ன செய்யலாம்?


இதனை முன்னிட்டு திருநள்ளாறுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் இன்று பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி சாமி தரிசனம் செய்ய நாள் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோயிலை சுற்றி 1400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


இந்நிலையில் சனிப்பெயர்ச்சி நடைபெறும் ராசிக்காரர்கள் சிலருக்கு இன்று திருநள்ளாறு போக முடியாத நிலை ஏற்படலாம். அப்படியானவர்களாக நீங்கள் இருந்தால் கவலையை விடுங்கள். திருநள்ளாறு செய்ய முடியாதவர்கள் என்ன செய்யலாம்? என்பதை காணலாம். 



  • சனிப்பெயர்ச்சி அன்று அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வரலாம்.

  • நவகிரகத்தில் உள்ள சனி பகவான் சன்னதியில் கருப்பு துணியில் எள் விளக்கு ஏற்றலாம்.

  • சாலையோரம் வசிப்பர்வர்கள், ஏழைகளுக்கு உணவு உள்ளிட்ட தங்களால் இயன்ற உதவிகளை செய்யலாம்.

  • காகம் சனிபகவானின் வாகனம் என்பதால் இன்றைய நாளில் காகத்துக்கு உணவு படைத்து பின்னர் சாப்பிடலாம்.

  • இன்று திருநள்ளாறு சென்று வர முடியாத மகரம்,கும்பம் ராசிக்காரர்கள் அடுத்த 48 நாட்களுக்குள் திருநள்ளாறு செல்லலாம்.  


சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறுக்கு சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசின் கும்பகோணம் போக்குவரத்து கோட்டம் சார்பில் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ | Karungali Malai: கருங்காலி மாலையில் பயன்கள் இவ்வளவா? யார் அணியலாம்? அணியக் கூடாது? முழு விவரம்