கிரகங்கள் இடம் பெயர்வது இயல்பான நிகழ்வுதான் என்றாலும் இந்து மதத்தில் குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிக்கிரகம் சூரியனை சுற்றி வர மொத்தம் 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால் அந்த முப்பது ஆண்டுகளையும் 12 ராசிகளுக்கும் சராசரியாக பிரித்தால் இரண்டரை ஆண்டுகள் வரும். அப்படி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் இருந்து அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு மற்றொரு ராசிக்கு சனி இடம் பெயர்தலையே சனிப்பெயர்ச்சி என்கிறோம்.




இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப்பிரசித்தி பெற்ற சனீஸ்வரபகவான் தலமான தர்பாரண்யேஸ்வர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சனிகிரகத்தின் அதிபதியான சனிபகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் சனி பரிகாரம் ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. இதனை அடுத்து இந்த ஆண்டு வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் மாலை 5.20 பெயர்ச்சி அடைந்தார். பின்னர் சனி ஈஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கரிக்கப்பட்டு மஹர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 




இதில் சுவாமி தரிசனத்திற்காக, தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் தரிசனம் செய்தனர். மேலும் விழாவில் கலந்துக்கொள்ள புதுச்சேரி, தமிழக மட்டும் இன்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு டிக்கெட்டுகள் 1,000 ரூபாய், 600 ரூபாய் மற்றும் 300 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு அபிஷேகத்திற்கு 500 ரூபாய், சிறப்பு சகஸ்ரநாம அர்ச்சனைக்கு 300 ரூபாய் சிறப்பு திலசூரண நைவேத்ய அர்ச்சனைக்கு 300 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் திருநள்ளாறுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக நேற்று முதல் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, ராமநாதபுரம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. மேலும் காரைக்கால் மாவட்ட வட்டார போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக 20 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் காரைக்கால் ரெயில் நிலையம், புதிய பேருந்து நிலையம், சந்தைதிடல், பஜன்கோ வேளாண் கல்லூரி, செல்லூர் வி.ஐ.பி. நகர், அத்திப்படுகை ஆகிய முக்கிய இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. அத்துடன் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ஆட்டோ சேவைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




விழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து செல்லும் வகையிலும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 1,400-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் புனித நீராடும் நளன் குளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு கோயில் வளாகம் மற்றும் நகரத்தின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படுகின்றன. சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக இன்று புதன்கிழமை முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.