தமிழில் மிகவும் முக்கியமான மாதம் கார்த்திகை மாதம் ஆகும். கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்குச் செல்வது வழக்கம் ஆகும். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து செல்கின்றனர்.


இந்த சூழலில், சபரிமலைக்கு முதன்முறையாக மாலை அணிபவர்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியது குறித்து கீழே காணலாம்.


முதன்முறை மாலை அணிபவர்களா?



  • சபரிமலைக்கு முதன்முறையாக மாலை அணிபவர்கள் பல வருடங்கள் மாலை அணிந்து சபரிமலைக்குச் செல்லும் குருசாமியின் ஆலோசனை பெற்று, குடும்பத்தினரிடமும் கலந்தாலோசித்து மாலை அணிய வேண்டும்.

  • சபரிமலைக்கு முதன்முறையாக மாலை அணிபவர்களை கன்னிசாமி என்று அழைப்பார்கள்.

  • மாலை போடுவதற்கு முன்பு வீட்டை நன்றாக சுத்தம் செய்து சாமி படங்களை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும்.

  • மாலை போடுவதற்காக நல்ல உறுதியான கம்பியால் செய்யப்பட்ட துளசி மணி மாலையை வாங்க வேண்டும். அதை காய்ச்சாத பசும்பாலில் போட வேண்டும்.

  • பசும்பாலில் போட்டவாறு மாலையை ஒருநாள் முழுவதும் வைக்க வேண்டும். பின்னர், அதை எடுத்து நல்ல சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.

  • சுத்தம் செய்யப்பட்ட துளசி மாலையை வீட்டில் ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்ட ஐயப்பன் படத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும்.

  • மாலை அணியும் நாளில் சாமி படத்தில் மாட்டிய மாலையை எடுத்து கோவிலில் சாமி பாதத்தில் வைத்து பூஜை செய்த பிறகு, குருசாமி முன்பு மண்டியிட்டு மாலை அணிந்து கொள்ள வேண்டும்.

  • தாயே அனைத்திற்கும் முதன்மையானவள் என்பதாலும், தாயே அனைத்திற்கும் முன்பு முதல் தெய்வம் என்பதாலும் குருசாமி இல்லாத கன்னிசாமிகள் தனது தாயின் கையாலும் தாயை வணங்கி அவரது கையாலும் மாலை அணிந்து கொள்ளலாம்.

  • மாலை அணிந்து விரதம் இருப்பதற்கு குருசாமியின் ஆலோசனை அவசியம் என்பதால் குருசாமியிடமே பலரும் மாலை அணிகின்றனர்.


கன்னிசாமி செய்ய வேண்டியது என்ன?



  • முதன்முறையாக மாலை அணியும் கன்னிசாமிகள் கருப்பு உடை மட்டுமே அணிய வேண்டும்.

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் காலில் செருப்பு அணியக்கூடாது.

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்களம் இரண்டு வேளையும் குளித்து விட்டு காலை மாலை என இரு வேளையும் பூஜை செய்த பிறகே சாப்பிட வேண்டும்.

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் பாகற்காய், அகத்திக்கீரை, வாழைக்காய் போன்றவற்றை சாப்பாட்டில் சேர்க்கக்கூடாது.

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகைப்பிடித்தல் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

  • பாய் போன்றவற்றை தவிர்த்து தரையில் துண்டு போன்றவற்றை விரித்தே தூங்க வேண்டும்.

  • மாலை அணிந்தவர்கள் துக்க வீடு போன்ற வீடுகளுக்கு கண்டிப்பாக செல்லக்கூடாது.

  • முதன்முறையாக மாலை அணியும் கன்னிசாமியினர் வீட்டில் கன்னிசாமி பூஜை நடத்த வேண்டும். மற்ற ஐயப்ப சாமிகளை வீட்டிற்கு அழைத்து அன்னதானம் வழங்க வேண்டும்.

  • மாலை அணிந்தவர்களை மற்றவர்கள் சாமி என்று அழைப்பது போல, மாலை அணிந்தவர்களும் மற்றவர்களை சாமி என்று அழைக்க வேண்டும்.

  • ஐயப்பனுக்கு மாலை அணிபவர்கள் கோபம், காமம் போன்ற உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆன்மீக சிந்தனையில் இருக்க வேண்டும்.