கேரளாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயபப்ன் கோயில். உலகப் பிரிசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். குறிப்பாக, கார்த்திகை மாதம் மாலை அணிந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள்.

Continues below advertisement


நடப்பாண்டு சபரிமலைக்குச் செல்பவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:


1. சபரிமலைக்குச் செல்ல உள்ள பக்தர்கள் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று உங்களின் ஆதார் எண், மொபைல் எண், பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


2. இணைய வழியாக முன்பதிவு செய்த பக்தர்கள் தினசரி 70 ஆயிரம் பேர் வரை மட்டுமே நடப்பாண்டு அனுமதிக்கப்படுவார்கள். 


3. சபரிமலைக்கு நேரடியாக சென்று ஸ்பாட் புக்கிங் செய்யும் பக்தர்கள் தினசரி 20 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.


4. ஸ்பார்ட் புக்கிங் செய்வதற்கான கவுன்டர்கள் எரிமேலி, நிலக்கல், பம்பா, வண்டி பெரியாறு கெஸ்ட் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. 




5. சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம், பூஜைகள், சன்னிதானத்தில் தங்குவதற்கான இணையவழி முன்பதிவு கடந்த 5ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.


6. வரும் 17ம் தேதி அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது. மண்டல பூஜை 17ம் தேதி காலை தொடங்கி டிசம்பர் 27ம் தேதி வரை நடைபெற உள்ளது.


7. மண்டல பூஜை, படி பூஜைக்கு பிறகு வரும் டிசம்பர் 27ம் தேதி ஹரிவராசனம் பாடப்பட்டு கோயில் நடை சாத்தப்படும்.


8. மகரவிளக்கிற்காக மீண்டும் டிசம்பர் 30ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. பின்னர், 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி மகரவிளக்கு ஜோதி காட்சி நடக்கும்.


9. பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக மகரவிளக்கிற்காக திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோயில் ஜனவரி 20ம் தேதி வரை திறந்திருக்கும்.


10. சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்களும், பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இதனால், பக்தர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


பொதுவாக, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் தமிழ்நாட்டிலும் சரி, கேரளாவிலும் சரி மழைப்பொழிவு இருக்கும் மாதம். இதனால், பக்தர்கள் அதற்கேற்றாற்போல மலைக்குச் செல்லும் நாட்களை திட்டமிட்டு செல்வது சிறப்பாகும்.


குவியும் பக்தர்கள்:


சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக ஏராளமான சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், கேரள அரசும் செய்துள்ளது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு வருவது வழக்கமான ஒன்றாகும். 


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கேரளாவை காட்டிலும் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் செல்வார்கள். மேலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் செல்வது வழக்கம் ஆகும். நடப்பாண்டு வழக்கத்தை காட்டிலும் அதிகளவு பக்தர்கள் செல்வார்கள் என்று கருதப்படுகிறது.