சபரிமலை அய்யப்பன் கோயில் என்றாலே பக்தர்களின் எண்ணத்தில் தோன்றுவது 18 படிகள்தான். விரதமிருந்து, இருமுடி சுமந்து பக்தர்கள் ஐயனை 18-ஆம் படி ஏறிச்சென்று தரிசித்தலே மிகவும் சிறப்பானதாகும். சுவாமியை இவ்வாறு தரிசித்தால்தான் ஒரு மண்டலம் விரதமிருந்து கோயில் சென்று வந்ததன் முழுப் பலன்களையும் புண்ணியத்தையும் பெறமுடியும் என்பது ஐதீகம்.


ஐயப்பன் சுவாமி கொடிய அரக்கியான மகிஷியை வதம் செய்தபோது பயன்படுத்திய ஆயுதங்கள் 18 அவை, வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கைவாள், முள்தடி, முசலம், கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை இந்த 18 வகை ஆயுதங்களும் 18 படிகளாக அமையப்பெற்றன என்பதும் ஒரு ஐதீகம்.


சபரிசாஸ்தா ஐயப்பனைக் காண கடும் விரதமிருந்து வரும் பக்தர்கள் அனைவரும் புனிதம் நிறைந்த - புண்ணியம் அருள்கின்ற இந்த 18 படிகளில் ஏறிச்சென்று அகிலம் காத்திடும் அய்யப்பப்பெருமானை தரிசித்தலே சாலச்சிறந்ததாகும்.


இத்தகையை புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.




ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை


இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 15-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்.


இதனை தொடர்ந்து கற்பூர ஆழியில் தீ மூட்டப்படும். நடை திறப்பையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.


மேலும், 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜை வழிபாடுகள் நடை பெறுகிறது.


20-ஆம் தேதி வரை தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.


அன்றைய தினம், அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.