உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் பம்பையிலேயே பக்தர்கள் 24 மணி நேரமும் குறைந்த செலவில் இருமுடி கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.




புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. 


இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் இந்தாண்டு கடந்த நவம்பர் 16ஆம் தேதியான மண்டல பூஜை தொடங்கியது.  இதற்காக நவம்பர் 15ஆம் தேதி மாலையே சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது.




தொடர்ந்து நவம்பர் 16ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு வந்து செல்கின்றனர்


பொதுவாக சபரிமலை யாத்திரையை துவங்கும் பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே உறவினர்கள் முன்னிலையில் இருமுடி கட்டி பம்பைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிப்பவர்கள் அவசரமாக சபரிமலை பயணம் மேற்கொள்பவர்கள் இருமுடி கட்டாமல் மலைக்கு செல்கின்றனர். அதே நேரத்தில் இருமுடி கட்டிய பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படியில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். எனவே 18-ம் படி வழியாக ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் பம்பையிலே மிகக் குறைந்த செலவில் 24 மணி நேரமும் இருமுடி கட்ட வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இருமுடி கட்டு எடுத்து வர முடியாத பக்தர்கள் பம்பையிலே படி ஏற்றத்திற்கு அருகே விநாயகர் கோவில் சன்னதியில் இருமுடி கட்டிக் கொள்ளலாம்.




இதற்காக 300 ரூபாய் கட்டி ரசீது பெற்றுக் கொண்டால் அங்கு இருக்கும் பூசாரிகள் இருமுடி கட்டி பக்தர்களின் தலையில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். மேலும் இங்கு கட்டப்படும் இருமுடியில் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்காது. ஒரு நெய் தேங்காய் மட்டும் தரப்படும். கூடுதல் நெய் தேங்காய்க்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்கள் பம்பையில் ஸ்பாட் புக்கிங் செய்து இருமுடி கட்டிக் கொள்ளலாம் எனவும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.