kanchipuram ekambareswarar temple kumbabishekam date: காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோயிலில், திருப்பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் விரைவில் அதிகாரப்பூரா தேதியை அமைச்சர் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் - Ekambareswarar Temple
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், (ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாத சுவாமி கோயில்) பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோயிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில் முதல் கட்டுமானங்கள், 600 ஆம் ஆண்டே , கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
நிலத்திற்கு உரிய கடவுள் ஏகாம்பரநாதர்
பல்லவர் காலம் முதல் இந்த கோவில் பிரசித்தி பெற்றதாக இருந்து வருகிறது. அதே போன்று நாயக்க மன்னர்கள் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர். பல்வேறு மன்னர்கள் திருப்பணி செய்ததற்கான, ஆதாரமாக கல்வெட்டுக்கள் சான்றுகளாக கிடைத்துள்ளன. காஞ்சிபுரம் ஏகாம் நகர் கோயிலில், பெரிய ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
தெற்கு ராஜகோபுரம், பல்லவ கோபுரம், மேற்கு கோபுரம் என 3 வகை ராஜகோபுரங்கள் இருப்பது மிகவும் பிரசித்தி பெற்றதாக பார்க்கப்படுகிறது. கிழக்குத்திசை நோக்கி இருக்கும் ஏகாம்பரநாதர் சந்நிதியில் மூலவராக மணல் லிங்கமாக சுயம்புவாக ஏகாம்பர நாதர் அருள்பாலிக்கிறார். கோயில் உட்புறத்தில் சிவகங்கை குளம் மற்றும், கம்பா தீர்த்த குளம் உள்ளது. கோயிலுக்கு வெளிப்பகுதியில் சர்வதீர்த்தமும், மங்கள தீர்த்தமும் உள்ளன.
கோயில் திருப்பணிகள்
கோயில் திருப்பணிக்காக அரசு நிதி ரூ.12.75 கோடி, ஆணையர் பொது நல நிதி ரூ.1.74 கோடி, திருக்கோயில் நிதி ரூ.4.61 கோடி, உபயதாரர் நிதி ரூ.32.14 லட்சம் உட்பட மொத்தம் 28.48 கோடி மதிப்பில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருக்கோயிலில் அமைந்துள்ள பல்லவகோபுரம், சிவகங்கை தீர்த்தக்குளம் ,1000 கால் மண்டபம் மேல்தளம் பழுது பார்த்தல்,கம்பா நதி தீர்த்தம் பழுது பார்த்தல்,அபிஷேகநீர் மற்றும் மழைநீர் சிவகங்கை தீர்த்துக்குளத்துக்கு வரும் வகையில் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் பெருமளவு நிறைவு பெற்று விட்டன. ராஜகோபுரம் பணிகளும் நிறைவடைந்துள்ளன.
எப்போது கும்பாபிஷேகம் ?
இது குறித்து ஏகாம்பரநாதர் கோயில் அறங்காவலர் குழு தலைவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, காஞ்சிபுரம் ஏகாம்நாதர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்ள வரவுள்ள, அமைச்சர் எந்த தேதியில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்பது குறித்து தெரிவிப்பார் என தெரிவித்தார். இதுவரை இரண்டு தேதிகள் சிவாச்சாரிகள் குறித்து கொடுத்திருப்பதாகவும், நவம்பர் மூன்றாம் தேதி (2025) அல்லது டிசம்பர் எட்டாம் தேதி (2025) இரண்டில் ஒரு தேதி இறுதி செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.