புரட்டாசி மாதம் ( Purattasi Month) தொடங்கி உள்ளதை ஒட்டி முதல் நாளிலேயே காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.


புரட்டாசி மாதம் - பெருமாள் விரதம்


ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் புதன் பகவானுக்கே அதிபதியாக, அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. அந்த புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, புதன் அவதரித்த புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதீகம் ஆகும்.




மேலும், இதே புரட்டாசி மாதத்தில்தான் சனி பகவானும் சனீஸ்வரன் எனும் பட்டம் பெற்றார். ஒருவரின் வாழ்வில் சந்திக்கும் அத்தனை ஏற்றம் மற்றும் தாழ்வுகளுக்கு சனி பகவானின் ஆட்சி மிகப்பெரிய காரணம் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. அப்பேற்பட்ட சனி பகவானின் ஆசி பெறுவதற்காகவும், சனிபகவானால் வாழ்வில் ஏற்படும் இன்னல்களில் இருந்து தப்பிப்பதற்காகவும் இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளையும், சனி பகவானையும், பெருமாளையும் வணங்குகிறார்கள்.


கோயில்களில் சிறப்பு ஏற்பாடு


தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் களைகட்டி காணப்படும். திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி வழிபாட்டிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. உலகப்புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் புரட்டாசி பிரம்மற்சோவ ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.




 


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் 


பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் இன்று முதல் தொடங்கி உள்ளதை ஒட்டி பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்தி வரதர் கோவில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதை ஒட்டி முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து புரட்டாசி விரதத்தை தொடங்க வருகை தந்தனர்.


புரட்டாசி விரதம்


புரட்டாசி மாதம் தொடங்கியதை ஒட்டி அத்திகிரி மலையில் இருந்து கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய ஸ்ரீதேவி பூதேவி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி புரட்டாசி விரதத்தை தொடங்கி சென்றனர்.




வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். இதேபோன்று காஞ்சிபுரம் மாநகர் இதேே போன்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு விஷ்ணு கோயில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காஞ்சிபுரம் உலகளந்தார் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் வைகுண்ட ராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.