நம் முன்னோர்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பு மிக்கவர்களாக விளங்கி வந்துள்ளனர். கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், மருத்துவம், நீர் மேலாண்மை, வான்வெளி அறிவியல் என்று அனைத்திலும் திறமை மிக்க நிபுணர்களாக வலம் வந்துள்ளனர்.



அந்த வகையில் வரலாற்று சின்னங்களையும், சிறப்புகளையும் தன்னுள் கொண்டு சிறப்பிடம் பெற்றுள்ள புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் அருமையான, அற்புதமான சிவன் கோவில் பற்றி தெரியுங்களா? தெரிந்து கொள்வோம் வாங்க.

புதுக்கோட்டை மாவட்டம் ஏராளமான வரலாற்று சின்னங்களையும், அளப்பெரிய சிறப்புகளையும் கொண்ட மாவட்டமாக திகழ்ந்து வருகிறது. இங்கிருக்கும் குடைவரைக் கோயில்களும், பல நூற்றாண்டுகளாக நீடித்து நிலைத்துவரும் இயற்கை வண்ண சுவரோவியங்கள் இதற்கு அருமையான சாட்சி.

இது மட்டுமில்லை...  அற்புதமான சிற்பங்களும், கோட்டைகளும், பழமைவாய்ந்த கோவில்களும், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொன்மைச் சான்றுகளும் புதுக்கோட்டை மாவட்டத்தை பற்றிய கண்ணோடத்தை ஆச்சரியப்படுத்துகிறது... வியப்பில் ஆழ்த்துகிறது என்றால் மிகையில்லை. அந்த வகையில் புதுக்கோட்டையிலிருந்து 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது நார்த்தாமலை மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
இங்கே, மேலமலை, கோட்டைமலை, பறையர் மலை, உவக்கன் மலை, ஆளுருட்டி மலை, மண்மலை, கடம்பர் மலை,பொம்மாடி மலை  மற்றும் பொன்மலை போன்ற ஒன்பது சிறிய மலைக் குன்றுகள் உள்ளன. சரிங்க இதில் என்ன இருக்க போகிறது என்கிறீர்களா. இருக்கே.





இந்த பகுதிக்கு மிக முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது மேலமலைதான். இங்கேதான் இருக்கிறது சிறப்பு மிக்க விஜயாலய சோழீஸ்வரம் கோவில். மேலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் உயரத்தில் அமைந்துள்ளது விஜயாலய சோழீஸ்வரம்.

இங்கே செல்லும் வழியில் தலையருவி சிங்கம் சுனை ஒன்று இருக்கிறது. இதுதான் மேற்குறிப்பிட்ட கோயில் உள்ள இடம். இங்கு சுமார் 15 அடி ஆழத்தில் சிவபெருமானுக்காக வெட்டப்பட்ட குடைவரைக் கோயில் ஒன்று உள்ளது. சிற்பக்கலையில் நம் முன்னோர்களின் திறமையை இன்று வரை பறைசாற்றிக் கொண்டு இருக்கிறது என்றால் மிகையில்லை. இந்த சுனைக்கு உள்ளே ஜீரஹரேஸ்வரர் என்னும் குடைவரைக் கோவிலில் குடைந்தே வடிக்கப்பட்ட அழகிய லிங்கம் இருக்கிறது.





இந்த லிங்கம் இந்த கோவிலைப் போலவே, பாறையிலேயே குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். வழவழப்பாக அமைக்கப்பட்டுள்ள இந்த லிங்கம் சதுர வடிவிலான குடைவரைக் கோவிலுக்குள் சென்று வழிபடலாம். சுமார் 6 அடி கொண்ட அந்த கோலிலை பார்ப்பதற்கு அழகாகவும், வியப்பாகவும் இருக்கிறது. எப்படிப்பா இந்த கோயிலை வடிவமைச்சாங்க என்பதுதான் அது.

இந்த அரிய குடைவரைக் கோவிலுக்கு செல்ல அந்த சுனையில் பள்ளத்தில் இறங்கி செல்ல வேண்டும். அருகிலேயே கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. அதில் ஒரு கல்வெட்டில் 1857ஆம் ஆண்டு ராஜா ராமச்சந்திர தொண்டைமான் ராணியால் இந்த சுனை நீர் இறைக்கப்பட்டு சிவலிங்கம் தரிசிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுனை பெரும்பாலும் தண்ணீர் நிறைந்தே காணப்படும் எனவே இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த ஒரு கோவில் இருப்பது பலருக்கும் தெரியாது. இந்நிலையில் நடப்பாண்டில் உள்ளூர் மக்கள் ஒன்று சேர்ந்து, சுனையில் நிரம்பி இருந்த நீரை மோட்டார் மூலம் வெளியேற்றிவிட்டு, அங்கே சிவராத்திரி விழாவை எளிமையான முறையில் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





இந்த பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு வருபவர்கள் விஜயாலய சோழீஸ்வரம், விஷ்ணு குடவரை, பழியிலி ஈசுவரம் குடவரைக் கோயில் ஆகியவற்றையும் கண்டு தரிசிக்கலாம்.

மேலும், பல்வேறு சிறப்பு மிக்க சிற்பங்களையும் காணலாம். இந்த பகுதியில் இருக்கும் இடங்களை பார்த்து ரசித்து வியக்க ஒரு நாள் போதாது. இருப்பினும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு தினமும் வந்து செல்கின்றனர்.