தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேஸ்வரருக்கு சுமார் 2 டன் எடையுடைய காய்கனிகள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து 108 கோ பூஜை நடைபெற்றது. முன்னதாக முதல்நாள் மாலையில் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. 


உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.


தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.




தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோவிலை காட்டியது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.


இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை. இக்கோயிலில் அனைத்து விழாக்களும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 


அந்த வகையில் மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி மகா நந்திகேஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேகம்,  தீபாராதனை ஆகியவை கடந்த மாலையில் நடந்தன. நடைபெற்றன. பின்னர், மகா நந்திகேஸ்வரருக்கு ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ எடையில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பரங்கிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், சௌ சௌ, முள்ளங்கி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசி போன்ற பழ வகைகளாலும், முறுக்கு, அதிரசம், ஜிலேபி போன்ற இனிப்புகளாலும், மல்லிகை, செம்பருத்தி, செவ்வந்தி போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. 


தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர், மகா நந்திகேஸ்வரர் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் தஞ்சையின் ராஜ வீதிகளில் உள்ள மக்கள் வளர்க்கும் 108 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள், பட்டுத் துணி அணிவிக்கப்பட்டன. மேலும், பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.


விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் எஸ். மாதவன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.