பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடியதாகவும் மற்றும் நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதம் இரண்டாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார் கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. அதன் பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருக்கோவிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பின்னர் லட்டு, முறுக்கு, இனிப்பு வகைகள், காய்கறி மற்றும் பழ வகைகளால் மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.




இதனை தொடர்ந்து, அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி திட்டு வாசற்படியில் சூரிய பகவானுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு அண்ணாமலையாரையும் சூரிய பகவானையும் ஒருசேர சமயத்தில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவிலின் கருவறை முதல் 1000 கால் மண்டபம் வரை உள்ள 5 நந்தி பகவானுக்கு சமேத உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் காட்சி அளித்தனர். இதேபோன்று இன்று ஒரு நாள் மட்டுமே முப்பது முக்கோடி தேவர்களுக்கும் அண்ணாமலையார் காட்சி தருவார் என்பது ஐதீகம். இதனையடுத்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் மாடவீதியில் காலை முதல் மாலை வரை 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி காட்சியளிப்பார்.  


 




இதுகுறித்து சிவாச்சாரியார்கள் கூறுகையில், 


மாட்டுப் பொங்கல் அன்று இந்த பெரிய நந்திக்கு 108 பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பழம், காய்கறிகள், இனிப்பு வகைகள், ரூபாய் நோட்டுகள் என்று 108 வகையான பொருட்களால் அலங்காரம் செய்யப்படும். அதன் பிறகு தீபாராதனை நடத்தப்படும். இந்த அபிஷேக, அலங்காரத்தை கண்டுகளித்தால் சர்ப்பதோஷம் உள்பட அனைத்து தோஷங்களும் விலகும். பொதுவாக பிரதோஷம் தினத்தன்று நந்திக்கு அபிஷேகம் செய்ய பசும்பால் கொடுத்தாலும் அலங்காரம் செய்ய தும்பை பூ வாங்கி கொடுத்தாலும் செல்வம் வந்து சேரும், பதவி உயர்வு கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். தை மாதம் மாட்டுப் பொங்கல் தினத்தன்று அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள அனைத்து நந்திகளுக்கும் அண்ணாமலையார் காட்சி கொடுத்து சிறப்பு செய்வார். நந்திக்கு பெருமை சேர்க்கவே சிவன் இவ்வாறு எழுந்தருழுகிறார். பெரிய நந்தியை தொடர்ந்து நான்காம் பிரகாரத்தில் ஒரு நந்தியும், மூன்றாம் பிரகாரத்தில் ஒரு நந்தியும் உள்ளன. இந்த மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நந்தி அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறார். சிவாலயங்களில் 5 வகை நந்தி இடம் பெறும் என்பார்கள்.